இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை கடந்த ஐந்து ஆண்டுகளில் எப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் இந்த ஐடி நிறுவனங்கள் சம்பாதிக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டுமே செலவு செய்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
ஐடி துறையின் முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை தக்க வைக்க முடியாமல் தவித்து வரும் வேளையில், அதிகப்படியான சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கொடுத்து வருகிறது. இதேபோல் வெளியேறிய ஊழியர்கள் இடத்தில் புதிய ஊழியர்களை நியமிக்கும் போது அதிகப்படியான சம்பளத்தில் நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இது மட்டும் அல்லாமல் பொதுவாகவே ஐடி ஊழியர்களின் சம்பளம் பிற ஊழியர்களை காட்டிலும் அதிகம் என்பதால் ஐடி நிறுவனங்கள் தங்களது வருமானத்தில் அதிகப்படியான தொகையை ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டுமே செலவு செய்கிறது.
டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ
டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தை பெற்று வரும் காரணத்தால் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை அனைத்து மட்டத்திலும் ஈர்த்துள்ளது. இது பெரும் சுமையாக இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் அதிகப்படியான லாபத்தை அளிக்கும்.
எல்&டி இன்ஃபோடெக், மைண்ட்ட்ரீ
2022 நிதியாண்டில் இந்தியாவின் டாப் 3 ஐடி நிறுவனங்கள் தங்களது மொத்த வருவாயில் சுமார் 62 சதவீதத்தை ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டுமே செலவு செய்துள்ளது. L&T Infotech இந்த ஆண்டு அதன் சகோதர நிறுவனமான Mindtree உடன் இணைந்து மிகவும் தாராளமாக சம்பளத்தை ஊழியர்களுக்கு அளித்தது, அதே நேரத்தில் டெக் மஹிந்திரா அதன் பணப்பையை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டது.
சம்பளம்
கடந்த ஐந்து ஆண்டுகளில், டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய 3 முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் சராசரியாக 53-55 சதவீதம் வரையிலான வருவாயை சம்பளமாக அளித்துள்ளது. அதே நேரத்தில் எல்&டி இன்ஃபோடெக் (எல்டிஐ) மற்றும் மைண்ட்ட்ரீ போன்ற சிறிய நிறுவனங்கள் பெரு நிறுவனங்கள் உடன் போட்டிப்போடும் விதமாக மொத்த வருவாயில் 60-63 சதவீதம் வரையில் சம்பளத்திற்காக செலவு செய்துள்ளது.
ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா
ஆனால் டாப் 3 இடத்திற்குள் நுழைய வேண்டும் என போட்டிப்போட்டு வரும் ஹெச்சிஎல் டெக் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை மிகவும் நிதானமாக தனது வர்த்தகத்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைத்துக்கொண்டும் செலவுகளையும் குறைத்துள்ளது. இதன் மூலம் ஹெச்சிஎல் டெக் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை சராசரியாக வெறும் 51% மட்டுமே ஊழியர்களுக்காக செலவு செய்துள்எளது.
7 ஐடி நிறுவனங்கள்
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், டெக் மஹிந்திரா, எல்&டி இன்ஃபோடெக் (எல்டிஐ) மற்றும் மைண்ட்ட்ரீ ஆகிய 7 முன்னணி ஐடி நிறுவனங்கள் 2022 ஆம் நிதியாண்டில் 5.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருவாயை ஈட்டியுள்ளது.
5 வருட கதை
இதில் 3 லட்சம் கோடி ரூபாயை இந்த 7 ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளமாக மட்டுமே அளித்துள்ளது. இதேபோல் கடந்த 5 வருடத்தில் அதாவது 2018ஆம் நிதியாண்டு முதல் 2022 வரையில் 22 லட்சம் கோடி ரூபாயை வருவாயாக பெற்றுள்ளது, இதில் 12 லட்சம் கோடி ரூபாயை சம்பளமாக அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications