டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 2 சதவீதம் பேரை இந்த ஆண்டு பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ஐடி ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைப்பதாக புகார் எழுந்திருக்கிறது.
பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களும் தங்கள் நிறுவனங்களில் நடக்கும் நிகழ்வுகளை ரெடிட் தளத்தி பதிவு செய்வார்கள். அந்த வகையில் டிசிஎஸ் ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு டிசிஎஸ் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. அந்த நபர் டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் அந்த பதிவில் "நான் டிசிஎஸ் -இல் பணிபுரிகிறேன் என்னுடைய மேலாளர் 14 ஆண்டுகாலம் டிசிஎஸ்-இல் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். அவரை திடீரென வேலையில் இருந்து நீக்கி உள்ளனர்" என குறிப்பிட்டு இருக்கிறார். என்னுடைய டீம் மேனேஜர் மற்றும் குழுவினருக்கு அமெரிக்காவை சேர்ந்த ஒரு கிளையன்டின் ப்ராஜெக்ட்டை கொடுத்தார்கள். அந்த கிளையன்ட் 15 செயலிகளை எங்களிடம் வழங்கி அவற்றை நவீனப்படுத்த வேண்டும் என கூறினர்.
நாங்கள் அந்த செயலிகளை ஆய்வு செய்ததில் அதனை நவீனப்படுத்துவது சாத்தியமற்ற செயல் என்றும் தொடக்கத்தில் இருந்து இதற்கான கோடிங்கை மாற்றி எழுத வேண்டும் என்றும் டிசிஎஸ் தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்பினோம், ஆனால் நிர்வாகம் அதனை காது கொடுத்து கூட கேட்கவில்லை, ஒரே நாளில் டீமை 10 பேர் கொண்டதாக விரிவாக்கம் செய்துவிட்டு உங்களுக்கு ஒரு மாத காலம் தருகிறோம் ஒரு மாத காலத்தில் இந்த 15 செயலிகளையும் நவீனப்படுத்துங்கள் என கூறினார்களாம்.

இது சாத்தியம் இல்லாத ஒரு இலக்கு என டீமில் இருந்த அனைவரும் கூறிய போது தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் ஏற்காமல் இந்த ப்ராஜெக்டை முடித்தால் தான் உங்களுக்கு சம்பளம் என கூறினார்களாம். 4 மாதங்களாக இவர்கள் முயற்சித்தும் அந்த செயலிகளை நவீனப்படுத்த முடியவில்லையாம். இந்நிலையில் திடீரென ஹெச்.ஆர் தரப்பில் அந்த டீம் மேனேஜரை அழைத்து நீங்கள் உடனே கிளம்புங்கள் உங்களுக்கு இங்கே இனி வேலை இல்லை என கூறிவிட்டார்களாம்.
பொதுவாக இது போன்ற சமயங்களில் 3 மாதம் நோட்டீஸ் காலம் இருக்கும் அல்லது குறிப்பிட்ட தொகையை வழங்குவார்கள். ஆனால் வேண்டுமென்றே இவரின் செயல்திறன் மோசமாக இருப்பதால் வேலையை வீட்டு நீக்குகிறோம் என அனுப்பிவிட்டார்களாம். 14 ஆண்டு காலம் டிசிஎஸ் நிறுவனத்துக்காக வேலை செய்தவருக்கே இது தான் நிலைமை என அவர் கூறியுள்ளார். நிர்வாகத்தின் தவறுக்கு பாவம் அவர் என்ன செய்வார் என அந்த ஊழியர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை அடுத்து பலரும் இந்தியாவில் ஐடி வேலைகள் நிலையற்ற வேலைகளாக மாறி வருகின்றன என தங்களுடைய கவலைகளையும் பதிவு செய்த வண்ணம் இருக்கின்றனர். சிலர் டிசிஎஸ் நிறுவனம் கட்டாயப்படுத்தி ஊழியர்களை ராஜினாமா செய்ய வைக்கிறது அல்லது இது போன்ற சூழலுக்கு வேண்டுமென்றே தள்ளுகிறது என கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications