இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தங்கள் ஊழியர்களின் அலுவலக வருகையை அடிப்படையாகக் கொண்டு Variable Pay அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இது டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான் டிசிஎஸ் சில முக்கிய பிரிவு ஊழியர்களை வாரத்தில் ஐந்து நாட்களும் உரிய ஆடை கட்டுப்பாடுகள் உடன் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்ற கட்டாய உத்தரவை அமல்படுத்தியது.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மாதங்களில் வேரியபிள் பே தொடர்பான புதிய கொள்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கை என்ன..? யாருக்கு அதிக பாதிப்பு..?
ஒரு டிசிஎஸ் ஊழியர் குறைந்தபட்சம் 60 சதவீதத்திற்கும் குறைவான அலுவலக வருகையைக் கொண்டிருந்தால், ஒவ்வொரு காலாண்டுக்கும் அளிக்கப்படும் வேரியபிள் பே பெறுவதற்குத் தகுதி பெற மாட்டார்கள் என்பது தான் புதிய கொள்கை.
டிசிஎஸ் சமீபத்தில் தங்கள் உள்நிர்வாக மனிதவள மேம்பாட்டு (HR) இணையதளத்தில் கொள்கை மாற்றத்தை அப்டேட் செய்துள்ளது. இந்த புதிய கொள்கையின் படி இனி வரும் காலங்களில், ஒரு டிசிஎஸ் ஊழியர்கள் அவருக்கான முழு வேரியபிள் பே தொகையைப் பெறவேண்டுமாயின் குறைந்தபட்சம் 85 சதவீத நாட்கள் அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.
75-85 சதவீதம் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் மாற்றுத்திறன் சம்பளத்தில் 75 சதவீதத்தையும், 60-75 சதவீதம் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 50 சதவீதத்தையும் பெறுவார்கள். மேலும், இதனைத் தொடர்ந்து மீறுபவர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படலாம்.
டிசிஎஸ் நிறுவனத்தின் 2024 நிதியாண்டின் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது பேசுகையில் டிசிஎஸ் சிஇஓ கே.கிருத்திவாசன், மார்ச் காலாண்டில் தான் பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்பினர் என்று கூறினார்.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு டிசிஎஸ் ஹைப்ரிட் வொர்க் மாடலை பாலோ செய்கிறது. ஆனால் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இதை முடிவுக்குக் கொண்டுவந்து வாரத்திற்கு ஐந்து நாட்கள் அலுவலகத்தில் பணிபுரியுமாறு ஊழியர்களைக் கேட்டுக் கொண்டது.
மேலும், பிப்ரவரியில், தங்கள் அலுவலக தளத்தில் உள்ள வருகையுடன் வேரியபிள் பே சம்பளம் இணைக்கப்படும் என்று ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்திருந்தது.


Click it and Unblock the Notifications