சென்னை: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சிஸ் சர்வீசஸ்) பல்வேறு ஜெனரேட்டிவ் ஏஐ சேவைகளை ஒருங்கிணைத்து ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. தற்போது சர்வதேச அளவில் ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளிலும் இந்த ஜெனரேட்டிவ் ஏஐ சேவைகள் என்பது தற்போது ஒருங்கிணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு பரவலாக இருக்கக்கூடிய ஜெனரேட்டிவ் ஏஐ சேவைகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்துள்ளது டிசிஎஸ் நிறுவனம்.
AI WisdomNext என பெயரிடப்பட்டுள்ள இந்த தளத்தை பயன்படுத்திக்கொண்டு பல்வேறு நிறுவனங்களும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தங்களுடைய செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள முடியும் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிளாட்பார்மிற்குள் நுழைந்தால் ஒவ்வொரு நிறுவனமும் அவர்களது தொழில்களுக்கு ஏற்ற வகையிலான ஜெனரேட்டிவ் ஏஐ சேவைகள் குறித்த தகவல்களையும் தங்களது தொழிலுக்கு இதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த விவரங்களையும் பெற்றுக் கொள்ளலாம் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிசிஎஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்திருக்கக் கூடிய ஆவணத்தில் , AI WisdomNext தளம் நிறுவனங்கள் தரவுகளின் முழு ஆற்றலையும் பயன்படுத்தவும் தங்களுடைய வணிக செயல் திறனை ஊக்குவிக்கவும் உதவும் என தெரிவித்துள்ளது.

வணிக ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தை அனைவரும் எளிதாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு தளத்தை உருவாக்கி இருப்பதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ ஆகியவை வணிகங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறி வருகின்றன. ஆனால் எந்த சேவை தங்கள் நிறுவனத்திற்கு தேவையான மாடல்களை கொண்டுள்ளது என்பதை கண்டறிவதில் பல்வேறு நிறுவனங்களும் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. அதற்கு தீர்வு வழங்குகிறது இந்த தளம்.
பல்வேறு நிறுவனங்களுடன் நடத்திய ஆய்வில் ஜெனரேட்டிவ் ஏஐ நுட்பத்துக்கு மாறுவதில் சிக்கல்கள் இருப்பது குறித்த விவரம் தெரிய வந்ததை அடுத்து AI WisdomNext தளத்தை நிறுவியதாக டிசிஎஸ் நிறுவனம் கூறியுள்ளது. தற்போதைய சூழலில் வணிக செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கு இது உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள இரண்டு நிறுவனங்கள் மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஒரு வங்கி உள்ளிட்ட பல பெரிய வாடிக்கையாளர்கள் இந்த தளத்தை ஏற்கனவே பயன்படுத்தியுள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தளத்தின் முக்கிய அம்சங்களையும் டிசிஎஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன்படி முன் கட்டமைக்கப்பட்ட தொழில் தீர்வு வரைபடங்கள், அறிவார்ந்த evaluator bots, தெளிவான முடிவுகளை எடுக்க உதவும் செயல்திறன், கிளவுட் நெட்வொர்க்கிற்கு எளிதில் மாறும் திறன், வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையை வழங்கும் திறன் ஆகியவையே இதன் முக்கிய அம்சங்கள் என கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications