சென்னை: டிசிஎஸ் நிறுவனம் திடீரென ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பது இந்திய ஐடி துறையில் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது . இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமே ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுத்திருப்பதால் அதனை பின்தொடர்ந்து பல்வேறு ஐடி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையை தொடங்கும் என சொல்லப்படுகிறது.
ஏஐ தொழில்நுட்பம், ஐடிக்கான தேவை குறைந்தது, அமெரிக்க அரசின் வரி விதிப்பு ஆகிய மூன்றும் இந்திய ஐடி நிறுவனங்களை பெருமளவில் பாதிப்படைய செய்துள்ளன . அதன் ஒரு விளைவு தான் டிசிஎஸ் நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கை. பொதுவாக இதுபோல பணி நீக்கத்துக்கு ஆளாபவர்களுக்கும் நிதி ரீதியான பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். அதனை எப்படி மேலாண்மை செய்வது என்பது குறித்து தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

எமர்ஜென்சி நிதி: எப்பொழுதுமே தங்கள் கைவசம் அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுக்கான பணத்தை எமர்ஜென்சி நிதியாக உருவாக்கி வைத்திருக்க வேண்டும். இதனை நம்முடைய சேமிப்பு கணக்குகள் அல்லது பிக்சட் டெபாசிட் போன்றவற்றில் வைத்திருக்க வேண்டும் என நிதி ஆலோசகர்கள் அறிவுரை வழங்குகின்றனர். மாதாந்திர வீட்டு வாடகை ,மளிகை பொருள் செலவுகள் மற்றும் பிற அத்தியாவசிய செலவுகளுக்கு அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்கு தேவையான தொகை கட்டாயம் எமர்ஜென்சி நிதியாக வைத்திருக்க வேண்டும்.
எமர்ஜென்சி நிதி இல்லை என்றால்: ஒருவேளை அப்படி எமர்ஜென்சி நிதி எதுவும் உங்களிடம் இல்லை திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டுவீட்டிர்கள் எனும் போது உங்களுக்கு பெரிய அளவில் லாபம் ஈட்டி தராத காப்பீடுகள், பெரிய அளவில் வருமானம் தராத மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்டவற்றை பணமாக மாற்றி எமர்ஜென்சி செலவுக்கு பயன்படுத்தலாம். அவசரத்திற்கு தங்கத்தையும் பயன்படுத்தி பணமாக்கி கொள்ளலாம்.

காப்பீடுகள்: நாம் வேலை செய்யக்கூடிய நிறுவனங்களே நமக்கு மருத்துவ காப்பீடு திட்டங்களை வழங்கினாலும் , பணி நீக்க நடவடிக்கைப் பிறகு அந்த காப்பீடு திட்டங்கள் எதுவுமே நமக்கு கிடைக்காது. எனவே எப்பொழுதுமே நமக்கென தனியாக மருத்துவ காப்பீடு திட்டங்களை வைத்திருப்பது நல்லது. அதேபோல டெர்ம் இன்சூரன்ஸ் திட்டங்களும் கட்டாயம். இதுவரை நீங்கள் இவற்றை எடுக்காமல் இருந்தால் முதலில் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
பட்ஜெட்: உங்களுடைய நிறுவனத்தில் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுவிட்டது அல்லது பணி நீக்கமே செய்து விட்டார்கள் உங்கள் கையில் இவ்வளவுதான் பணம் இருக்கிறது எனும் போது பணத்தை செலவிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி வெளியில் சென்று உணவு உண்பது ,தேவையில்லாமல் ஷாப்பிங் செய்வது உள்ளிட்டவற்றை நிறுத்த வேண்டும். பட்ஜெட் போட்டு எந்தெந்த செலவுகளுக்கு கட்டாயம் நமக்கு பணம் தேவை என பிரித்து ஒதுக்கீடு செய்வது, குடும்பமாக அமர்ந்து திட்டமிடுவது சிறந்தது.
கடன்கள்: பணிநீக்கம் செய்யப்படுபவர்களுக்கு மாதாந்திர ஈஎம்ஐ செலுத்துவது தான் பெரிய தலைவலியாக இருக்கும். இதற்கு எமர்ஜென்சி நிதி தயாராக இருக்க வேண்டும், இல்லை என்றால் இதனை சற்று காலத்திற்கு தள்ளி போட முடியுமா அபராதம் இல்லாமல் செய்ய முடியுமா மாற்று வழிகள் என்ன என்பதை வங்கியிடம் பேசி முடிவெடுப்பது சிறந்தது. அதே போல பணிநீக்க காலத்தில் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும். வேலை கிடைத்த உடன் அந்த பில்லை கட்டுவதே பெரிய சுமையாக மாறி விடும்.
ஓய்வுகால முதலீட்டில் கை வைக்கலாமா? : நாம் ஓய்வுகாலத்திற்கு என முதலீடு செய்து வைத்திருக்கோம், திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டால் உடனடியாக இந்த பணத்தில் கை வைக்க கூடாது. ஏனெனில் நீண்ட கால அடிப்படையில் நம் நிதி பாதுகாப்பை இது அழித்துவிடும். வேறு வழியே இல்லை எனும் போதும் மட்டுமே இந்த பணத்தில் கை வைக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications