புனே: டாடா குழுமத்திற்கு சொந்தமான ஐடி சேவை நிறுவனம் தான் டிசிஎஸ். இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக ஊழியர்கள் புகார்களை முன்வைத்த வண்ணம் இருக்கின்றனர்.
டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கிறது, வேலை விட்டு வெளியேறக்கூடிய ஊழியர்களுக்கு முறையாக இழப்பீடுகளை வழங்காமல் தவிர்க்கிறது , டிசிஎஸ் நிறுவன ஹெச்ஆர் மாஃபியா போல் செயல்படுகின்றனர், ஊழியர்களை தாக்குகின்றனர் என குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக டிசிஎஸ் நிறுவனத்தின் மீது முன்வைக்கப்பட்டு வருகின்றன.

டிசிஎஸ் நிறுவனத்தின் செயல்களுக்கு எதிராக ஐடி ஊழியர்களுக்கான சங்கமும் தொடர்ந்து போராட்டங்களையும் நடத்துவதை காண முடிகிறது . இதனிடையே புனே அலுவலகத்தில் உள்ள தங்களுடைய 2500 ஊழியர்களை உடனடியாக வேலையை விட்டு வெளியேறும்ப டிசிஎஸ் நிறுவனம் நிர்பந்தம் செய்வதாக ஐடி ஊழியர்களுக்கான சங்கம் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஒரு புகார் மனுவை அனுப்பி வைத்திருக்கிறது .
இதற்கிடையே டிசிஎஸ் நிறுவனம் இந்த குற்றச்சாட்டினை மறுத்து இருக்கிறது. தங்கள் நிறுவனம் இரண்டு சதவீத ஊழியர்கள் அதாவது 12000 பேர் வேலையில் இருந்து நீக்குவதாக ஏற்கனவே அறிவித்த நிலையில் இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்திருக்கிறது . தங்கள் நிறுவனம் 2500 பேரை வேலையில் இருந்து செல்லும்படி கட்டாயப்படுத்துவதாக இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் ஆதாரமற்றது என்றும் உள்நோக்கத்துடன் பகிரப்படுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தங்கள் நிறுவனத்தின் மறு சீரமைப்பு நடவடிக்கையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று டிசிஎஸ் நிறுவனம் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறது.ஊழியர்களுக்கு முறையான நிதி சார்ந்த இழப்பீடுகள் கிடைப்பதை தங்கள் நிறுவனம் உறுதி செய்து வருவதாகவும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களில் தொடங்கி இரண்டு வருடம் வரையிலான சம்பளத்தை வழங்கி தான் ஊழியர்களை வெளியேற்றி வருகிறோம் என டிசிஎஸ் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது .
முன்னதாக ஐடி ஊழியர்களுக்கான சங்கத்தின் தலைவர் , புனே அலுவலகத்தில் மட்டும் 2500 ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கிறது டிசிஎஸ் என குறிப்பிட்டு மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சர் பட்னவிஸுக்கு புகார் கடிதம் எழுதி இருந்தார். இந்த பணி நீக்க நடவடிக்கால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஊழியர்களுக்கு நியாயம் பெற்று தர வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டிருந்தார் .
இவர்களில் 10 முதல் 20 ஆண்டுகாலம் நிறுவனத்திற்காக உழைத்தவர்கள் , பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு மேல் கொண்டவர்கள் இஎம்ஐ, பள்ளி கட்டணம், மருத்துவ செலவு என பல பொறுப்புகளை கொண்டுள்ளனர் என கூறியுள்ளார். தற்போது இருக்கும் இந்த போட்டி நிறைந்த உலகில் இவர்களால் வேறு வேலை தேடுவது என்பது சாதியமில்லை என்றும் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications