இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் தங்களுடைய ஊழியர்களில் 2 சதவீதம் பேர் அதாவது 12 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு இரண்டு மாதங்கள் ஆகின்றன . இந்த இரண்டு மாத காலத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் மீது தொடர்ச்சியாக பல்வேறு புகார்களை ஊழியர்கள் முன் வைத்து வருகின்றனர்.
தங்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கின்றனர், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர், மாஃபியா போல செயல்படுகின்றனர் பல ஊழியர்களும் ரெடிட் உள்ளிட்ட தளங்களில் தங்களுக்கு நிகழும் மோசமான அனுபவங்களை பதிவு செய்த வண்ணம் இருக்கின்றனர். இந்த சூழலில் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்ட டிசிஎஸ் ஊழியர் ஒருவர் மணி கண்ட்ரோல் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், நிறுவனத்திற்காக 13 ஆண்டு காலம் வேலை செய்திருக்கிறேன், ஐந்து மாதங்களாக டிசிஎஸ் நிறுவன ஹெச்ஆர் என்னை டார்ச்சர் செய்தனர் என கூறியுள்ளார்.

தன்னை டார்கெட் செய்து நெருக்கடி கொடுத்து வேலை இருந்து ராஜினாமா செய்ய நிர்ப்பந்தம் செய்தனர் என சாட்டி இருக்கும் அவர் திடீரென ஒருநாள் உங்களை வேலையை விட்டு நீக்கிவிட்டோம் என கூறுகின்றனர் என தெரிவித்துள்ளார் . 10 ஆண்டுகளுக்கு மேலாக விஸ்வாசமாக வேலை செய்த என்னை டிசிஎஸ் நிறுவனம் ஏமாற்றி விட்டது என தெரிவித்திருக்கிறார்.
வேண்டுமென்றே தேவையில்லாத காரணங்களை சுட்டிக்காட்டி தன்னை வேலையில் இருந்து நீக்கியதாக அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் பெஞ்ச் எனப்படும் எந்த ப்ராஜெக்டிலும் இல்லாமல் இருந்த காலகட்டத்திற்கு ரெக்கவரி கட்டணமாக 7 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என டிசிஎஸ் நிறுவனம் நிர்பந்தம் செய்வதாக கூறி இருக்கும் அவர் தன்னுடைய கிராஜுவிட்டி பணத்தில் அதனை பிடித்து கொண்டார்கள் என கூறியுள்ளார்.
தான் பெஞ்சில் இருந்த மாதங்களில் தினமும் ஹெச்ஆர் என்னை அழைத்து தேவையற்ற கேள்விகளை கேட்டு டார்ச்சர் செய்தனர் என கூறியுள்ள அவர் ஒரு நரகத்தில் இருப்பதைப் போல உணர்ந்தேன் என்றும் தெரிவித்திருக்கிறார். தற்போது புனேவில் நண்பர்களின் வீட்டில் வசித்து வருவதாக கூறியிருக்கும் அவர் வேறு இடத்தில் வேலை தேடி வருவதாகவும் சொந்த ஊரில் இருக்கும் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரியாது என்றும் அவர்களிடம் எனக்கு வேலை போன விஷயத்தை கூறும் தைரியம் இல்லை என்றும் பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார் .

டிசிஎஸ் நிறுவனம் எதிர்காலத்திற்கு நிறுவனத்தை தயார்படுத்துவது என்ற உத்தியின் கீழ் பல்வேறு தொழில்நுட்பம் நுட்பங்களில் முதலீடு செய்து அதற்கேற்ற வகையில் ஊழியர்கள் எண்ணிக்கையை மறுக்கட்டமைப்பு செய்வதாக அறிவித்திருந்தது. டிசிஎஸ் 2% ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது முதலே அச்ச உணர்வு அலுவலகம் முழுவதும் நிறைந்திருப்பதாக மணி கண்ட்ரோல் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஊழியர்கள் கூறுகின்றனர்.
பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட சீனியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர், அலுவலக ஊழியர்கள் மத்தியில் அச்சம் , குழப்பம் உள்ளிட்டவை நிறைந்திருக்கிறது . யாருக்கு ஹெச்.ஆர் போன் அழைப்பு வருமோ, அடுத்து நமக்கு தானோ என அனைவரும் அச்சத்துடனே வேலை செய்கின்றனர் என கூறுகின்றனர். போன் கால் வருகிறது, மின்னஞ்சல் வருகிறது உடனடியாக வேலையில் இருந்து செல்லுமாறு கூறுகின்றனர், சிலர் உடனடியாக வேலை விட்டு செல்கின்றனர் , சிலர் முடியாது என கூறுகின்றனர், அவர்களை டார்கெட் செய்து வேலையை விட்டு அனுப்புகின்றனர் என சுட்டிக்காட்டுகின்றனர்.
சில சமயங்களில் ஒட்டுமொத்த டீமையே கூட வேலையிலிருந்து நீக்குகின்றனர் , வேலையில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காகவே மேலாளர்கள் ஒரு பட்டியலை வைத்திருக்கிறார்களாம் அவர்களை டார்கெட் செய்து பெஞ்சில் அமர வைப்பது வேலையில் செயல்திறனில் குறை கூறுவது என மோசமாக நடந்து கொள்கின்றனர் என கூறுகின்றனர். ரத்தன் டாடா மறைவுக்கு பின் டிசிஎஸ் நிறுவனம் தன் மாண்பை இழந்துவிட்டதாக ரெடிட் தளங்களில் பல ஊழியர்களும் பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications