டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் தங்கள் ஊழியர்களில் 2 சதவீதம் பேரை வேலையிலிருந்து நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்தம் 12000 ஊழியர்கள் நடப்பு நிதியாண்டில் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
டிசிஎஸ் நிறுவனம் 12000 பேர் என கூறிவிட்டு அதைவிட அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கிறது என தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. இத்தகைய சூழலில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த ஐடி ஊழியர்களுக்கான சங்கங்கள் ஒருங்கிணைந்து டிசிஎஸ் நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளன.

மூன்று மாநிலங்களை சேர்ந்த ஐடி ஊழியர்கள் சங்கமும் கூட்டாக இணைந்து டிசிஎஸ்-இன் முறைகேடான பணி நீக்க நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மூன்று ஐடி ஊழியர்கள் சங்கமும் வெளியிட்டு இருக்கக்கூடிய கூட்ட அறிக்கையில் டிசிஎஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட இரண்டாவது காலாண்டு நிதி முடிவுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதில் 38 ஆயிரம் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என சாடி இருக்கின்றனர். செப்டம்பர் வரையிலான காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 6.57 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறது ஆனால் பல ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது என அந்த கூறியுள்ளனர். 6000 பேரை தான் லே ஆஃப் செய்தோம் என தெரிவித்த டிசிஎஸ் நிறுவனம் கூறுகிறதே அப்படி என்றால் மீதி 32 ஆயிரம் பேர் தாங்களாகவே வேலையை விட்டு சென்றார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
டிசிஎஸ் நிறுவனம் கட்டாயப்படுத்திய முறைகேடான நடைமுறைகளை பின்பற்றி தான் 32000 ஊழியர்களையும் வேலையில் இருந்தும் வெளியேற்றி இருக்கிறது என அதில் குறிப்பிட்டுள்ளனர் . மேலும் பல்வேறு ஊழியர்களும் எந்த ஒரு நோட்டீஸும் இல்லாமல் பெஞ்சில் அமர வைக்கப்படுவதாகவும் சில மணி நேரங்களிலேயே கட்டாயப்படுத்தி வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஊழியர்களின் போன் உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகள் எல்லாம் வாங்கி வைத்துவிட்டு தனிப்பட்ட முறையில் அழைத்து அவர்களை மிரட்டுகின்றனர் . பலருக்கும் எந்த ஒரு நிதி இழப்பீடும் கொடுக்காமல் வேலையை விட்டு நீக்கியுள்ளனர். பொதுவாக ஒரு நிறுவனம் மொத்தமாக ஊழியர்களை பணியில் இருந்து நீக்குகிறது என்றால் அதற்கேற்ப அரசிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறையை டிசிஎஸ் பின்பற்றவில்லை என கூறியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் சட்டத்தையும் வேலை இழந்தவர்களுக்கான நீதியும் நிலைநாட்ட உடனடியாக தலையிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
டிசிஎஸ் நிறுவனம் தொடர்ச்சியாக தன்னுடைய பணிநீக்க நடவடிக்கைகளால் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. ஊழியர்களே ரெடிட் தளத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் கிடைத்த மோசமான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இது தான் ஐடி உலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications