டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான வேளையில், 2008 ஆம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடியின் போது நிகழ்ந்த நிகழ்வுகளுடன் ஒப்பிடப்பட்டு மக்கள் பார்க்க துவங்கியுள்ளனர்.
ஆனால் இவை இரண்டும் வேறுபட்ட சூழல்களில் நடந்தவை. 2008-ல் நிகழ்ந்தவை மற்றும் இப்போதைய சூழல் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இப்போது பார்க்கப்போகிறோம்.

2008 நெருக்கடி- ஆறாத வடு
2008-ல் உலக பொருளாதார நெருக்கடி இந்திய ஐடி துறையை கடுமையாக பாதித்தது, ஏனெனில் இத்துறை பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளிலிருந்து வந்த வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தகளையே நம்பியிருந்தது. நிதி நெருக்கடியால் அந்நாடுகளின் நிறுவனங்கள் தங்கள் ஐடி பட்ஜெட்டை குறைத்து, புதிய திட்டங்களை தள்ளிப்போட்டன, இதனால் இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாய் மற்றும் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
இதன் விளைவாக, 2007-2008 காலக்கட்டத்தில் இந்திய IT-ITeS ஏற்றுமதியின் வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டுகளில் 30% இருந்து அளவீடு 2008-09-ல் 14.6% ஆக குறைந்தது. இதனால் பல நிறுவனங்கள் செலவைக் குறைக்க பணிநீக்கம் மற்றும் வேலை நிறுத்தங்களை அமல்படுத்தின, குறிப்பாக டெஸ்டிங் மற்றும் சப்போர்ட் துறைகளில் அதிகப்படியான ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். புதிய ஊழியர்களை பணியமர்த்துவதையும் நிறுத்தினர், இதனால் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டது.
2008-ல் டிசிஎஸ்-இன் நடவடிக்கைகள்
2008-ல் உலக பொருளாதார நெருக்கடியின் போது டிசிஎஸ் பல வர்த்தக மாற்றங்களை எதிர்கொண்டது, ஆனால் அதிகளவிலான பணிநீக்கத்தை தவிர்க்கப்பட்டதற்காக இப்போது வரையில் பாராட்டப்பட்டு வருகிறது. அப்போது டிசிஎஸ் நிறுவனம் வேரியபிள் பே தொகையை குறைத்து, மோசமான செயல்திறனைக் காரணம் காட்டி சில ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கியது டிசிஎஸ்.
இருப்பினும், இதை ஆண்டு தோறும் நடைபெறும் செயல்திறன் மேலாண்மை பயிற்சியாகவே விளக்கியது, இதேபோல் ரெசிஷன் மூலம் ஏற்படவில்லை என அறிவிக்கவில்லை.
2025-ல் டிசிஎஸ்-இன் பணிநீக்கம்
டிசிஎஸ்-ன் தற்போதைய பணிநீக்கம் வேறு விதமாக அமைந்துள்ளது. இது 12,000 ஊழியர்கள் 2026ஆம் ஆண்டுக்குள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டது. பிரமிடின் கீழ் பகுதியில் இருக்கும் ஊழியர்கள், நீண்ட நாட்களாக பெஞ்சில் இருப்பவர்களும் பாதிக்கப்படலாம், ஆனால் முக்கியமாக நடுத்தர மற்றும் மூத்த நிலைகளில் இருக்கும் ஊழியர்களுக்கு இது அதிகப்படியான பாதிப்பை தரக்கூடும். இந்த பணிநீக்கம் ஊழியர்களின் திறமை பொருத்தம் இல்லாமை மற்றும் அவர்களை பணியில் அமர்த்த முடியாத சூழ்நிலையால் ஏற்பட்டது என டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் தெரிவித்துள்ளார்.
2008-ல் நடந்த பணிநீக்கம் சர்வதேச நிதி நெருக்கடியின் செயின் ரியாக்ஷன் மூலம் பாதிக்கப்பட்டது. ஆனால் இப்போது திறமை மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களால் ஏற்பட்டுள்ளது.
பணிநீக்கத்தின் எண்ணிக்கை
2008ல் நடந்த பணிநீக்கத்தில் டிசிஎஸ் வெறும் 500 பேரை மட்டுமே பணியில் இருந்து நீக்கியது, ஆனால் தற்போது 12000 ஊழியர்கள் நீக்கப்பட உள்ளனர். மேலும் 2008-09 காலக்கட்டத்தில் டிசிஎஸ் ஊழியர்கள் எண்ணிக்கை 1,43,000 ஆக இருந்தது தற்போது 6,13,069 ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications