டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட வேலைவிடுப்புகள் மற்றும் புதிய நியமனங்களில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக மத்திய தொழிலாளர் அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் செனட் சங்கம் (NITES) அளித்த புகாரின் அடிப்படையில் டிசிஎஸ் நிறுவன அதிகாரிகளிடம் மத்திய தொழிலாளர் அமைச்சகம் விசாரணை நடத்தவுள்ளது.
அதாவது, டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 12,000 ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கியது, 600 பேர் வரையிலான புதிய நியமனங்கள் பல மாதங்களாக தாமதம் செய்வது தொடர்பாக விசாரணை நடைபெறவுள்ளது. இந்த இரண்டு விஷயங்களும் தொழிலாளர் உரிமைகளைப் பாதிக்கக்கூடியவை என்பதால், அமைச்சகம் நேரடியாக விசாரணையில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

NITES அளித்த புகாரின் அடிப்படையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி டிசிஎஸ் நிறுவன அதிகாரிகள் நேரில் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள NITES தலைவர் ஹர்பிரீத் சிங் சலுஜா, "இந்த வேலைவிடுப்புகள் மிகவும் மனிதாபிமானமற்ற மற்றும் இந்திய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக விதிமீறல் ஆகும்.
பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 10 முதல் 20 ஆண்டுகள் நிறுவனத்தில் பணியாற்றிய நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்கள். அவர்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், மின்னஞ்சல் மூலம் முடிவைத் தெரிவித்துள்ளனர். இந்திய ஐடி துறை என்பது இலட்சக்கணக்கான தொழில்நுட்பப் பணியாளர்களை வேலைவாய்ப்புடன் வைத்திருக்கும் மிகப்பெரிய துறை. டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனம், சட்ட முறைகளை பின்பற்றாமல் இவ்வாறு பணிநீக்கங்களை அனுமதிக்கப்படுவதாக இருந்தால், அது மற்ற நிறுவனங்களுக்கும் தவறான முன்னுதாரணமாக அமையும். இந்திய வேலைவாய்ப்பு அமைப்பில் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.
ஜூலை 27ஆம் தேதி டிசிஎஸ் நிறுவனம் 12,000 நிரந்தர ஊழியர்களை வேலைவிடுக்கும் திட்டத்தை மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் மூத்த நிலைத் தொழிலாளர்கள் ஆவார்கள். இதைத்தொடர்ந்து, ஜூலை 29ஆம் தேதி, NITES சங்கம் மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சூக் மாண்டவியாவை நேரில் சந்தித்து, அனைத்து பணிநீக்க நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறும், ஏற்கனவே வேலைவிடுக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்குமாறும் வலியுறுத்தியது.
2025 ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி, டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 6,13,069 ஆக உள்ளது. தற்போது வேலைவிடுப்பு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், ஜூன் காலாண்டில் மட்டும் 5,000 புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மீது முதலீடு, புதிய சந்தைகள், திறமையான ஊழியர் மேம்பாடு மற்றும் தகுதிவாய்ந்த பணியாளர் அமைப்பை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், வேலை விடுப்பில் உள்ள பணியாளர்களுக்கு தேவையான வசதிகள், புது வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்கள், உளவியல் ஆலோசனை மற்றும் அனைத்து விதமான ஆதரவுகளும் வழங்கப்படும் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications