டாடா குழுமத்தின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு முதலும் முக்கியக் காரணமான ரத்தன் டாடா-வின் 83வது பிறந்த நாளான இன்று, இக்குழுமத்தின் மிகப்பெரிய நிறுவனமான டிசிஎஸ் பங்குகள் இன்று புதிய உச்சத்தை அடைந்து, இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 11 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்த நிகழ்வு ரத்தன் டாடா-வின் 83வது பிறந்த நாள் பரிசாக விளங்குகிறது.
புதிய உச்சத்தில் டிசிஎஸ்
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 1.43 சதவீதம் வரையில் அதிகரித்து ஒரு பங்கின் விலை 2,949.70 ரூபாய் வரையில் உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டது. இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 11.20 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தக முடிவு
ஆனால் வர்த்தக முடிவில் 1.42 சதவீத உயர்வில் இருந்து 50 சதவீதம் சரிந்து 0.78 சதவீத உயர்வுடன் ஒரு பங்கு விலை 2,932.10 ரூபாய்க்கு இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது. இதனால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. மேலும் டிசிஎஸ் பங்குகள் வளர்ச்சிக்கு புதிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதால் இந்நிறுவனத்தின் மீதான முதலீடுதள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
வர்த்தக விரிவாக்கம்
டிசிஎஸ் நிறுவனம் சந்தையில் சக போட்டி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் ஆகியவற்றுக்குப் போட்டியாகத் தனது வர்த்தகத்தையும் சேவைகளையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனம் தனது கிளவுட் சேவையைத் தனியாகப் பிரித்தது மட்டும் அல்லாமல் சேவை வாரியாக 5 பிரிவுகளாகப் பிரித்துள்ளது. இதன் மூலம் உலக நாடுகளில் இருந்து அதிகளவிலான கிளவுட் வர்த்தகத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசிஎஸ் பைபேக் திட்டம்
மேலும் டிசிஎஸ் நிறுவனம் தனது 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பைபேக் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் காரணத்தால் இன்று அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து இந்நிறுவனப் பங்குகள் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. மேலும் டிசிஎஸ் நிறுவனத்தின் பைபேக் திட்டம் வருகிற ஜனவரி 1, 2021ஆம் தேதி முடிவடைகிறது குறிப்பிடத்தக்கது.
3000 ரூபாய் விலை
இந்தப் பைபேக் திட்டத்தின் கீழ் டிசிஎஸ் சுமார் 5,33,33,333 பங்குகளைச் சுமார் 3000 ரூபாய்க்குக் கைப்பற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பைபேக் திட்டம் ஒப்புதல் பெற்று அறிவிக்கப்பட்ட டிசம்பர் 17ஆம் தேதி நிலவரத்தின் படி டிசிஎஸ் பங்குகள் 2,837.90 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
இதன் மூலம் இந்தப் பைபேக் திட்டத்தில் சுமார் 5.71 சதவீத உயர்வில் டிசிஎஸ் பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications