இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை மற்றும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ், இன்று பங்குச்சந்தையில் சிறப்பான வர்த்தக உயர்வை பதிவு செய்த காரணத்தால், அதன் சந்தை மதிப்பு அதிகப்படியாக 13 லட்சம் கோடி ரூபாயை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் பங்குகள் அதிகப்படியாக 3,560.80 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. குறிப்பாக வர்த்தகம் முடியும் ஒரு மணிநேரத்திற்கு முன்பு முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை ஐடி துறை நிறுவனங்கள் மீது செய்தனர்.
இதனால் டெக் மஹிந்திரா 3.46 சதவீதம், டிசிஎஸ் 2.32 சதவீதம், இன்போசிஸ் 2.15 சதவீதம், ஹெச்சிஎல் 1.63 சதவீதம் வரையிலான உயர்வை பதிவு செய்து வர்த்தகம் நிறைவடைந்தது.
டிசிஎஸ் சந்தை மதிப்பீடு
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் டாடா குழுமத்திலேயே அதிகம் வருவாய் ஈட்டி கொடுக்கும் டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் 2.32 சதவீதம் உயர்வில் 3,552.40 ரூபாய் அளவீட்டை அடைந்துள்ளது. இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு முதல் முறையாக 13 டிரில்லியன் ரூபாய், அதாவது 13 லட்சம் கோடி ரூபாய் அளவிலான மதிப்பீட்டைப் பெற்று புதிய சாதனையைப் அடைந்துள்ளது.
2வது டிசிஸ், முதலில் ரிலையன்ஸ்
இந்தியாவிலேயே 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டைப் பெற்ற 2வது நிறுவனம் டிசிஎஸ், முதல் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். ரிலையன்ஸ் இண்டஸ்டீஸ் கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய அளவிலான முதலீட்டைத் திரட்டி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து டிசிஎஸ் நிறுவனத்தை முந்திக்கொண்டு 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் பங்குகள் 0.39 சதவீதம் சரிந்து இருந்தாலும் இக்குழுமத்தின் சந்தை மதிப்பு 15.28 லட்சம் கோடி ரூபாய்.
ஆகஸ்ட் மாத வளர்ச்சி
நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் டாடா குரூப் நிறுவனங்களில் மிக முக்கியமான டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் கடந்த 9 நாட்களாகத் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் 12 வர்த்தக நாளில் டிசிஎஸ் பங்குகள் சுமார் 11 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இக்காலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.
டிசிஎஸ் - இன்போசிஸ்
இந்திய ஐடி சந்தையிலேயே மிகப்பெரிய ஐடி நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் நிறுவனம் வங்கி மற்றும் நிதியியல் சேவை, கம்யூனிகேஷன் சேவை, உற்பத்தித் துறைக்கான சேவை, ரீடைல் மற்றும் ஹைய் டெக் பிரிவு சேவைகளை வழங்குகிறது. சமீபத்தில் இந்நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 லட்சமாக உயர்ந்துள்ளது, இது 2வது இடத்தில் இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தை விடவும் இரண்டு மடங்கு அதிகம்.


Click it and Unblock the Notifications