ஐடி, ஹெச்.ஆர் போன்ற வெள்ளை காலர் வேலைகளுக்கு தான் ஏஐ ஆப்பு வைக்கிறது என்றால் இனி தொழிற்சாலை வேலைகளும் கூட ஏஐ வசம் சென்று விடும் போல இருக்கிறது. இதற்கான ஒரு மாடல் ஆலையை டிசிஎஸ் நிறுவனம் இந்தியாவில் அமைத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் , மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தனது முதல் 'லைட்ஸ்-அவுட்' தொழிற்சாலை ஆய்வகத்தை (Lights-Out Factory Lab) தொடங்கியுள்ளது. மனிதர்களே இல்லாத முழுக்க முழுக்க ஏஐ மற்றும் ரோபோக்களை கொண்டு இயங்கும் ஆய்வகம் இது என்பது தான் இதன் சிறப்பே.

புனேவில் உள்ள சியாத்ரி பூங்கா வளாகத்தில் இந்தியாவின் முதல் லைட்ஸ்-அவுட் தொழிற்சாலை ஆய்வகத்தை டிசிஎஸ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. Lights-Out Factory என்பது மனிதர்களின் தலையீடு இல்லாமல் முழுக்க முழுக்க தானியங்கி முறையில் செயல்படும் தொழிற்சாலை அமைப்பாகும். இங்கு ரோபோக்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இயந்திரங்கள் தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கும். அதாவது விளக்குகள் அணைக்கப்பட்டாலும் இயந்திரங்கள் இயங்கி கொண்டே இருக்கும் என்பதால் இதனை இப்படி அழைக்கின்றனர்.
இந்த புதிய ஆய்வகத்தை டிசிஎஸ் நிறுவனம் Digital Twins என அழைக்கிறது. அதாவது தொழில்துறை செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், தொழிற்சாலை கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் நிகழ்நேர செயல்பாட்டு நுண்ணறிவு ஆகியவற்றை ஒன்றிணைத்து இது செயல்படுகிறது.
இந்த ஆய்வகத்தின் மையப் பகுதியாக, பல கட்டங்களை கொண்ட முற்றிலும் ரோபோக்களால் இயக்கப்படும் Battery Pack Assembly Line அமைக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் தங்களது தொழிற்சாலைகளில் புதிய ஏஐ முறைகளை அறிமுகப்படுத்தும் முன், இந்த கட்டுப்பாடான சூழலில் அவற்றை சோதித்து பார்த்து, அதில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் சவால்களை முன்கூட்டியே கண்டறிந்து தவிர்க்கலாம் என்கிறது டிசிஎஸ்.
இந்த ஆய்வகம் இயந்திரங்களில் பழுது ஏற்படுவதை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கை தரும். பொருட்களின் தரத்தை மனிதர்களின் துணையின்றி துல்லியமாக சரிபார்க்கும். சரிபார்ப்பது. உற்பத்தியின் வேகத்தை உடனுக்குடன் சரிசெய்து மேம்படுத்தும். 24 மணி நேரமும் ஆலை அதன் முழு திறனுக்கு ஏற்ப தொடர்ந்து இயங்குவதை இது உறுதி செய்யுமாம். எத்தகைய தொழில் ஆலைகளுக்கு இது முதலில் பயன்பாட்டுக்கு வரும் என்பது தெரியவரவில்லை ஆனால் படிப்படியாக நம் தொழிற்சாலைகள் இப்படி ஏஐ மற்றும் ரோபோக்களால் மாறுவது உறுதி.
டிசிஎஸ் நிறுவனத்தின் தொழில்துறை மற்றும் இன்ஜினியரிங் பிரிவின் தலைவர் சீனிவாச சக்ரவர்த்தி, எதிர்காலத்துக்கான தொழிற்சாலைகளை மறுவரையறை செய்து வருகிறோம். Human + AI என்ற மாடலில் நிறுவனங்களை டிஜிட்டல் செயல்பாடுகளிலிருந்து முழுமையான தன்னிச்சையான உற்பத்தி அமைப்புகளுக்கு எவ்வாறு நகர்த்தலாம் என்பதை இந்த ஆய்வகம் தெளிவாக காட்டுகிறது என கூறியுள்ளார்.
ஏற்கனவே பெங்களூரில் என்விடியா (NVIDIA) நிறுவனத்தின் உதவியோடு Physical AI பயன்பாடுகளுக்காக டிசிஎஸ் ஒரு ஆய்வகத்தைத் தொடங்கியிருந்த நிலையில், புனேவில் தொடங்கப்பட்டுள்ள இந்த லைட்ஸ்-அவுட் தொழிற்சாலை ஆய்வகம் இந்தியாவின் உற்பத்தி துறையை Industry 4.0 என்ற அடுத்து கட்டத்திற்கு அழைத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


