இந்தியாவில் ஐடி சேவை என்றால் முதலில் நினைவுக்கு வருவது டிசிஎஸ் நிறுவனம் தான். இந்திய ஐடி துறையின் மாபெரும் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம், அதன் உலகளாவிய போட்டியாளரான அமெரிக்காவின் Accenture நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 2021ஆம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு அதாவது சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின் TCS இந்த சாதனையை நிகழ்த்தி மீண்டும் தான் ஒரு கிங் என நிரூபணம் செய்துள்ளது.
சந்தை நிலவரத்தின் படி TCS நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 84.6 பில்லியன் டாலர், அதுவே Accenture-இன் தற்போதைய சந்தை மதிப்பு 77.6 பில்லியன் டாலர் ஆகும். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட Accenture ஐடி நிறுவனம் தனது நான்காம் காலாண்டு வருவாய் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருக்கும் என்றும், புதிய ஆர்டர்கள் 2% குறைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. உலக அளவில் நிறுவனங்கள் ஐடி மற்றும் கன்சல்டிங் சேவைகளுக்கான செலவுகளை குறைத்து வருவதே இதற்கு முக்கியக் காரணம் என தெரிவித்தது.

ஆர்டர் மற்றும் வருவாய் குறையும் என்ற Accenture நிறுவனத்தின் அறிவிப்பால் அதன் பங்குகள் சுமார் 50% மேல் சரிவைச் சந்தித்துள்ளன. இதனால் டிசிஎஸ் நிறுவனம் Accenture-ஐ விட அதிக மதிப்புடைய நிறுவனமாக மாறியுள்ளது. Accenture அறிவிப்பால் இந்தியாவிலும் டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மகேந்திரா, கோ ஃபோர்ஜ் என பல்வேறு ஐடி நிறுவன பங்குகளும் பலமாக சரிந்துள்ளன. இதனால் இந்திய பங்குச்சந்தையே சிவப்பு நிறமாக காட்சி தருகிறது.
டிசிஎஸ் நிறுவனம் Accenture-ஐ முந்தியிருந்தாலும், இன்று பங்குச்சந்தையில் டிசிஎஸ் பங்குகள் சுமார் 7% வரை வீழ்ச்சியடைந்து ஆறு ஆண்டு காலச் சரிவைத் தொட்டு ஒரு பங்கு மதிப்பு 2,078.40 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகிறது. உலகளாவிய ஐடி துறையின் செலவுகள் குறைந்து வருவதை Accenture நிறுவனத்தின் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளதால், இது இந்திய ஐடி நிறுவனங்களையும் பாதிக்கும் என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வருகின்றனர்.
இதற்கிடையே மோதிலால் ஓஸ்வால் தரகு நிறுவனம் ஐடி துறைக்கான தற்போதைய சூழல் பலவீனமாக இருப்பதாகக் கூறுகிறது. புதிய ஒப்பந்தங்கள் குறைவது, வாடிக்கையாளர்கள் ஐடி சேவைக்கான செலவினங்களை குறைத்தது போன்றவை வளர்ச்சியைப் பாதிக்கின்றன என தெரிவித்துள்ளது. ஐடி துறையின் ஒட்டுமொத்த வருவாய் வளர்ச்சி அடுத்த சில காலாண்டுகளுக்கு மந்தமாகவே இருக்கும் என்றும் கூறுகிறது.
செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய வாய்ப்புகள் வந்தாலும், அது தற்போதைய பாரம்பரிய ஐடி செலவினக் குறைப்பை ஈடுசெய்யும் அளவுக்குப் பெரியதாக இல்லை என தெரிவித்துள்ளது. அதே வேளையில் ஜெஃப்ரீஸ் தரகு நிறுவனம் Accenture பங்குகளை பொறுத்தவரை 'Hold' என்ற பரிந்துரையை வழங்கியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

