சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2024) ரூ.12,040 கோடி அளவிலான நிகர லாபத்தைப் பெற்று பங்குச்சந்தை முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே ஜூன் காலாண்டை ஒப்பிடும் போது டிசிஎஸ் சுமார் 9 சதவீத உயர்வாகும். கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.11,120 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 2024 காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.62,613 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் பதிவான ரூ.59,381 கோடியை விட 5.4 சதவீதம் அதிகமாகும்.
இதை தொடர்ந்து நிறுவனத்தின் இயக்க லாப விகிதம் 24.7 சதவீதமாகவும், நிகர லாப விகிதம் 19.2 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இயக்க இலாப விகிதம் 1.5 சதவீதம் அதிகரித்துள்ளது பங்கு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாக உள்ளது.
ஜூன் காலாண்டு முடிவுகள் குறித்து பேசிய TCS தலைமை செயல் அதிகாரி கே.கிருத்திவாசன், "நாங்கள் புதிய நிதியாண்டை அனைத்துத் துறைகளிலும் மற்றும் சந்தைகளிலும் வளர்ச்சியுடன் சிறப்பாக தொடங்கியுள்ளோம். உலகளாவிய வாடிக்கையாளர் உறவுகளை தொடர்ந்து விரிவுபடுத்துகிறோம், புதிய தொழில்நுட்பங்களில் புதிய ஊழியர்கள் திறன்களை உருவாக்குகிறோம், பிரான்சில் புதிய AI துறை மீது கவனம் செலுத்தும் TCS பேஸ்போர்ட், அமெரிக்காவில் IoT ஆய்வகம், லத்தீன் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவில் விரிவாக்கப்பட்ட டெலிவரி சென்டர்கள் என தொடர்ந்து முதலீடு செய்கிறோம்" என்றார்.
இவை அனைத்தையும் விட முக்கியமாக டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக குழு முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்கும் விதமாக ஒரு பங்கிற்கு 10 ரூபாய் இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. இந்த ஈவுத்தொகையை வரும் ஜூலை 20, 2024 அன்று பதிவு செய்யப்பட்ட பங்குதாரர்களை பட்டியலிட்டு ஆகஸ்ட் 5, 2024 அன்று வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
கடந்த காலாண்டை ஒப்பிடும் போது இந்த காலாண்டின் வரிக்கு பிந்தைய லாபம் 3 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.12,502 கோடியாக இருந்தது. தற்போது ஜூன் காலாண்டில் ரூ.12,040 கோடி அளவிலான நிகர லாபத்தைப் பெற்றுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம், வருவாய், ஆப்ரேட்டிங் மார்ஜின் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு உள்ளதால் ஜூன் காலாண்டில் ஊழியர்களுக்கான வேரியபிள் பே 90 சதவீதம் வரையில் அளிக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications