இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் முதல் நிறுவனமாக இத்துறையில் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் அடிப்படையில் தான் பிற ஐடி சேவை நிறுவனங்களும் தனது காலாண்டு முடிவுகளை வெளியிடும் என்பதால் அனைத்துத் தரப்பு முதலீட்டாளர்களும் உன்னிப்பாகக் கவனித்து வந்தனர்.
இதற்கிடையில் உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் தனது வளர்ச்சி அளவீட்டைக் குறைத்தது மட்டும் அல்லாமல் ஐடி சேவைத் துறைக்கு அடுத்த சில மாதங்களுக்கு மந்தமான வர்த்தகம் மட்டுமே வரும் என்ற கணிப்பையும் வெளியிட்ட காரணத்தால் ஒட்டுமொத்த ஐடி சேவைத் துறையும் கலக்கத்தில் இருந்தது.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்க்கும் மத்தியில் டிசிஎஸ் நிறுவனம் இன்று வெளியிட்ட செப்டம்பர் காலாண்டு முடிவில் வருடாந்திர அடிப்படையில் 9 சதவீத வளர்ச்சியில் 11,342 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றது. இதேபோல் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 8 சதவீத வளர்ச்சியில் 59,692 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ளது டிசிஎஸ்.
ஆனால் கடந்த ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் பெரிய அளவிலான வளர்ச்சி ஏதுமில்லை. ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் வருவாயில் 0.5 சதவீத வளர்ச்சியும், லாபத்தில் 2.4 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளழில் 110 புள்ளிகள் உயர்ந்து 24.3 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 30 புள்ளிகள் அதிகம்.
மேலும் 2024 ஆம் நிதியாண்டில் எவ்விதமான வளர்ச்சி அளவுகளையும் குறைக்கவில்லை என்பது முதலீட்டாளர்களுக்கு முக்கியச் செய்தியாக உள்ளது. நிலையான நாணய மதிப்பீட்டில் வருடாந்திர அடிப்படையில் வருவாய் 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் இக்காலாண்டில் அதன் முக்கியமான வர்த்தகப் பிரிவான BFSI-விலஸ் காலாண்டு வருவாய் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே வளர்ச்சி அடைந்துள்ளது. இக்காலாண்டில் BFSI பிரிவில் இருந்து 22,840 கோடி ரூபாய் அளவிலான வருவாய் மட்டுமே பெற்றுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஆர்டர் புக் மதிப்பு 11.2 பில்லியன் டாலராக உள்ளது, இதேபோல் இந்நிறுவனத்தின் புக் டூ பில் விகிதம் 1.6 சதவீதமாக உள்ளது. செப்டம்பர் காலாண்டில் அதிக மதிப்புடைய ஆர்டர்கள் அதிகம் பெற்றுள்ளதால் சிறப்பான காலாண்டாக அமைந்துள்ளது என டிசிஎஸ் சிஇஓ கே கிருதிவாசன் தெரிவித்தார்.

டிசிஎஸ் நிர்வாகம் தனது ஆதாரங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி, செலவுகளைப் பெரிய அளவில் குறைக்கும் பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளது. இதனால் மார்ஜின் அளவு உயர அடிப்படை காரணமாக அமைந்துள்ளது என டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரியான சமீர் தெரிவித்துள்ளார்.
கடைசியாக டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் அளவு செப்டம்பர் காலாண்டில் 14.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த காலாண்டில் 17.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 608,985 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications