இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டாடா குழுமத்திற்கு சொந்தமான இந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் 2 சதவீதம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. இது ஒட்டுமொத்த ஐடி துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தியாவில் ஒரு காலத்தில் அரசாங்க வேலை போல பார்க்கப்பட்ட டிசிஎஸ் நிறுவனமா ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது என அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். 12 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக கூறியது ஆனால் உண்மையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறி இருக்கின்றனர். இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனம் மீண்டும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை கையில் எடுக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் டிசிஎஸ் நிறுவனம் மேலாளர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறதாம். அதாவது ஊழியர்களில் ஐந்து சதவீதம் பேரை பேண்ட் டி எனப்படும் குறைந்த செயல்திறன் கொண்ட பிரிவுக்கு தகுதி இறக்கம் செய்யும்படி கூறியிருப்பதாக மின்ட் செய்தி குறிப்பிடுகிறது. அண்மையில் தான் டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கியது. 5% முதல் 13% வரை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தது.
இந்த சூழலில் டிசிஎஸ் ஹெச்ஆர் தரப்பில் அனைத்து மேலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கக்கூடிய மின்னஞ்சலில் தயவுசெய்து மிக தீவிரமாகவும் மிக கவனமாகவும் ஊழியர்களை ஆய்வு செய்து பேண்ட் பி பிரிவில் வைத்திருக்கலாம் என நீங்கள் யாரையெல்லாம் எண்ணுகிறீர்களோ அவர்கள் குறித்த விவரங்களை அனுப்பி வையுங்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்த ஊழியர்களில் 5 சதவீதம் பேர் இந்த குறைந்த செயல்திறன் கொண்டவர்களாக கருதப்படக்கூடிய பேண்ட் பி பிரிவில் கொண்டுவரப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டிருக்கிறதாம்.
இதுதான் தற்போது ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் கடந்த ஆண்டு நிறுவனம் பணிநீக்கம் செய்த இரண்டு சதவீதம் பேர் இதேபோல under performers பிரிவில் வரையறுக்கப்பட்டவர்கள். தற்போது டிசிஎஸ் நிறுவனத்தில் 5,84,519 பேர் வேலை செய்கிறார்கள், இவர்களில் 17500 பேர் அதாவது 3 சதவீத ஊழியர்கள் under performer என்ற பிரிவில் வரையறுக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் தான் இவர்கள் அனைவருக்கும் வேலை பறி போகிறதோ என்ற அச்சம் தற்போது பெருமளவில் எழுந்திருக்கிறது.
இந்திய ஐடி நிறுவனங்கள் மிகவும் சவாலான சூழல்களை எதிர்கொண்டுள்ளன. அமெரிக்க பொருளாதார மந்த நிலை, மேக்ரோ பொருளாதார சூழல், ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்தியில் நிறுவனத்தை நிலைநிறுத்த வேண்டும், லாபத்தை அதிகரிக்க வேண்டும், ஏஐ துறையிலும் வளர்ச்சி அடைய வேண்டும் என நிறுவனங்கள் போராடுகின்றன. இதற்கிடையில் தான் பணிநீக்கமும் நடக்கிறது. இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் டிசிஎஸ் மட்டுமே கடந்த ஆண்டு பணிநீக்க நடவடிக்கையை எடுத்தது.


Click it and Unblock the Notifications

