இன்று இருக்கும் சூழலில் நாளைக்கு வேலை இருக்குமா? இன்கிரிமெண்ட் வருமா என்பதே பல லட்சம் ஐடி ஊழியர்களின் தவிப்பாக உள்ளது. பணிநீக்க (Layoffs) அச்சத்தால் தூக்கத்தை தொலைத்து நின்றிருந்த லட்சக்கணக்கான ஐடி ஊழியர்களுக்கு டிசிஎஸ் (TCS) அறிவிப்பானது ஒரு ஆறுதலான விஷயமாகவும் வந்துள்ளது. உலகமே பொருளாதார சரிவில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், தங்களை நம்பி உழைக்கும் 5.5 லட்சம் ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் சம்பள உயர்வை (Salary Hike) அறிவித்து கெத்து காட்டியுள்ளது டாடா குழும நிறுவனம்.
மற்ற நிறுவனங்கள் செலவை குறைக்க ஆட்களை தூக்கி கொண்டிருக்கும் போது, எங்கள் பலமே எங்கள் ஊழியர்கள் தான் என நிரூபித்துள்ளது டிசிஎஸ். டிசிஎஸ்-ந் இந்த அறிவிப்பை அடுத்து யாருக்கெல்லாம் அதிக சம்பளம் உயரும்? எவ்வளவு சதவீதம் உயர்வு கிடைக்கும்? ஐடி துறையின் இந்த பாசிட்டிவ் டர்னிங் பாயிண்ட் மற்ற நிறுவனங்களிலும் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமானது, இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று. டாடா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமானது வருடாந்திர சம்பள உயர்வு இருக்கும் என்றும். அது அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் இருக்கும் என்று அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த சம்பள அதிகரிப்பு, கடந்த வியாழக்கிழமை அன்று வெளியான காலாண்டு முடிவை அடுத்து வந்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான 4வது காலாண்டில் சிறப்பான லாபத்தை அறிவித்துள்ள நிலையில், அதன் முதலீட்டாளர்களும் இறுதி டிவிடெண்டாக 31 ரூபாயை அறிவித்தது. இந்த சூழலில் ஊழியர்களையும் குஷிப்படுத்தும் விதமாக கையோடு சம்பள அறிவிப்பையும் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்திருந்த நிலையில், இந்த ஆண்டு சற்று முன்னரே அறிவித்திருப்பது இன்னும் மகிழ்ச்சியான செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.
4வது காலாண்டில் 29% லாப அதிகரிப்பையும், 9.64% வருமான அதிகரிப்பையும் கண்டுள்ள நிலையில், அதன் ஊழியர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் சந்தோஷத்தை பகிர்ந்துள்ளது. இருப்பினும் இந்த சம்பள அதிகரிப்பு யாருக்கு எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 4வது காலாண்டில் 2,356 ஊழியர்களை பணியில் அமர்த்திய டிசிஎஸ் நிறுவனம், தொடர்ந்து எதிர்கால நலன் கருதி அதற்கேற்ற ஊழியர்களை பணி அமர்த்தி வருகிறது. முதலீடுகளையும் செய்து வருகிறது என டிசிஎஸ் நிறுவனத்தின் ஹெச்.ஆர் சுந்தீப் குன்னும்மல் தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலாண்டுளாக பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், 2026ம் நிதியாண்டின் 4வது காலாண்டில் 2,300-க்கும் மேற்பட்டவர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இதனிடையே 2026ம் நிதியாண்டின் இறுதியில் 5,84,519 பேராக மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஐடி துறையில் வேலை வாய்ப்புகள் குறையலாம் என்ற அச்சத்தின் மத்தியில், டிசிஎஸ் நிறுவனமானது பணியாளர்களை புதிதாக சேர்த்து வருகிறது. ஏஐ வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிறுவனம், அதற்காக சுமார் 2,70,000 ஊழியர்கள் ஏஐ மற்றும் மெஷின் லேர்னிங்கில் உயர்மட்ட நிபுணத்துவம் பெற்றுள்ள ஊழியர்களை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஏஐ சார்ந்த நிறுவனங்களையும் கையகப்படுத்தி வரும் நிறுவனம், எதிர்கால வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications