டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது மிகப்பெரிய வாடிக்கையாளராக இருக்கும் டென்மார்க்கை சேர்ந்த முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான டெலிநார் டென்மார்க்குடன் இணைந்து 5 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் TCS நிறுவனம் டெலினார் நிறுவனத்திற்கு சேவைகளை வழங்க உள்ளது. ITIS மேனேஜர் சர்வீசஸ், ஐடி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் போன்றவற்றை யூரோப்பில் இருக்கும் தனது அலுவலகத்தில் இருந்து வழங்கவுள்ளது.
சில ஆண்டுகளாக மந்தமாக இருந்த தொலைதொடர்பு துறையில் மீண்டும் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஐடி சேவைகளுக்கான தேவையும் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக டெலினார் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு ஐடி இன்ப்ராஸ்ட்ரக்சரை நவீனமயமாக்குவதில் டிசிஎஸ் செயல்பட்டு வந்தது.

டெலினார் நிறுவனத்தின் 1.6 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு டிசிஎஸ் நிறுவனம் சேவை செய்து வருகிறது. இந்த நீட்டிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் டிசிஎஸ் நிறுவனம் நாட்டின் 2-வது மிகப்பெரிய ஆபரேட்டரான டெலிநார் நிறுவனத்தின் செயல் திறனை அதிகரித்து செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டெலிநார் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்கவுள்ளது.
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக டிசிஎஸ் நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள 160-க்கும் மேற்பட்ட முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சேவை வழங்கி வருகிறது. உலகெங்கிலும் 35,000-த்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை அதற்காகப் பயன்படுத்துகிறது. இதில் முதல் 10 உலகளாவிய தொலைதொடர்பு ஆபரேட்டர்களில் 5 நிறுவனத்திற்கும், முதல் 6 ஐரோப்பிய ஆப்ரேட்டர்களில் 4 பேருக்கும், முதல் 7 வட அமெரிக்கா ஆபரேட்டர்களில் 6 பேருக்கும் டிசிஎஸ் சேவை வழங்குகிறது.
டெலிநார் டென்மார்க்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான லூயிஸ் ஹவுரம் கூறுகையில், "எங்கள் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் மேம்படுத்தலை ஏற்படுத்தவும், வளர்ந்து வரும் வணிகச் சூழலுக்கு ஏற்ப தீர்வுகளை வழங்கவும் டிசிஎஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து எந்தவித சிக்கலும் இன்றி நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க முடியும் என நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் ஹெட் கூறுகையில், "டெலினார் டென்மார்க் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மக்கள் மற்றும் வணிகங்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் இணைய உதவுகிறது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு டெலினார் நிறுவனத்திற்கு நம்பகத்தன்மை வாய்ந்த சேவையை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications