மும்பை பங்குசந்தை வாரத்தின் முதல் நாளான இன்று, சென்செக்ஸ் 354.21 புள்ளிகளைச் சரிந்து 71,731.42 புள்ளிகளை அடைந்துள்ளது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, மஹிந்திரா, பவர் கிரிட், டாடா ஸ்டீல், என்டிபிசி, டிசிஎஸ், இண்டஸ்இந்த் வங்கி பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தது.
நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 82.10 புள்ளிகள் சரிந்து 21,771.70 புள்ளிகளை எட்டியுள்ளது, துறைவாரியான நிஃப்டி குறியீட்டில் ஆட்டோமொபைல், உலோகம், பார்மா, ரியல் எஸ்டேட், ஹெல்த்கேர், எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடுகள் மட்டுமே உயர்வுடன் உள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பலரையும் கவர்ந்தது எல்ஐசி மற்றும் டிசிஎஸ் பங்குகள் தான் ஏன் தெரியுமா..?

எல்ஐசி பங்குகள்: திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யின் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 9 சதவீதம் வரையில் உயர்ந்து ரூ.1,000 ரூபாய் என்ற அளவீட்டைத் தாண்டியது. வர்த்தக முடிவில் எல்ஐசி பங்குகள் 5.32 சதவீத உயர்வில் 995.75 ரூபாய் உடன் முடிவடைந்தது.
சமீபத்தில் எல்ஐசி நிறுவனம், ஹெச்டிஎப்சி வங்கியில் தனது முதலீட்டை 9.9 சதவீதம் வரையில் உயர்த்த ஒப்புதல் பெற்றதில் இருந்து எல்ஐசி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் உயர்வுடன் காணப்படுகிறது.
நாட்டின் மிகப் பெரிய உள்நாட்டு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தனது புதிய தயாரிப்பான எல்ஐசி இன்டெக்ஸ் பிளஸ் திட்டத்தைப் பிப்ரவரி 6, 2024 முதல் விற்பனைக்குக் கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது. எல்ஐசி பங்குகள் இன்று அதிகப்படியாக 8.81 சதவீதம் உயர்ந்து ரூ.1,028 என்ற சாதனை உயர்வை எட்டியது. எல்ஐசி பங்குகள் இந்த ஆண்டுக்கு 18 சதவீதம் உயர்ந்துள்ளது.
டிசிஎஸ் பங்குகள்: இதேபோல் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் பங்குகள் இன்று 52 வார உயர்வை எட்டியுள்ளது. ஐடி துறை நிறுவனங்கள் புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவித்து வரும் வேளையில் டிசிஎஸ் ஏஐ துறையில் புதிய திட்டத்தைப் பெற்றுள்ளது.
Europ Assistance நிறுவனத்தின் ஐடி ஆப்ரேட்டிங் மாடலை செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் வைத்து மேம்படுத்தும் மாபெரும் திட்டத்தைப் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் Europ Assistance மற்றும் டிசிஎஸ் மத்தியில் பாரீஸ் நகரில் நடந்தது.
இதற்கான அறிவிப்பு டிசிஎஸ் முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐடி சேவை நிறுவன முதலீட்டாளர்களையும் குஷிப்படுத்தியுள்ளது. டிசிஎஸ் பங்குகள் 1.35 சதவீதம் அதிகரித்து 4020 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது, 4000 ரூபாய் அளவீட்டை முதல் முறையாக எட்டியுள்ளது டிசிஎஸ். வர்த்தக முடிவில் 3966.35 ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications