இந்தியாவில் பெரும்பாலான ஐடி ஊழியர்கள் மாதம் பிறந்து 1 ஆம் தேதி வரும் சம்பளத்தை நம்பிதான் வீட்டு செலவு, மருந்து செலவு முதல் கார் லோன், ஹோம் லோன் வரையில் அனைத்தையும் சமாளிக்கிறார்கள். இந்த நிலையில் சம்பளம் கொடுப்பதை மறுத்தால் ஒரு ஊழியரின் நிலை என்னாகும் என்பதை உணராமல் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் சுமார் 900 ஊழியர்களுக்கான சம்பளத்தைக் கட் செய்துள்ளது.
டாடா குழுமத்தின் பணம் கொட்டும் இயந்திரமாகச் செயல்படும் டிசிஎஸ் நிறுவனம் ஐடித் துறையில் நிலவும் மோசமான வர்த்தகப் பாதிப்பால் பல வகையில் பாதிக்கப்பட்டு உள்ளது. 3 முக்கியத் திட்டங்களை இழந்த காரணத்தால் பல நூறு மில்லியன் டாலர் மதிப்பிலான வருமானத்தை இழக்கும் நிலையில் உள்ளது. இதைச் சரி செய்ய ஊழியர்களின் செயல்திறன் மேம்படுத்தவும், முக்கியமான திட்டத்தைச் சீராகச் செயல்படுத்தவும் சுமார் 2000 ஊழியர்களைத் தங்களுடைய பணியாற்றும் இடத்தை மாற்றியது.

இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வொர்க் லோகேஷனை மாற்ற முடியாது என நிறுவனத்தின் உத்தரவுகளை மதிக்காத சுமார் 900 ஊழியர்களின் சம்பளத்தை டிசிஎஸ் நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் மீது ஏற்கனவே ஐடி ஊழியர்களின் அமைப்பான NITES 2000 ஊழியர்களின் திடீர் இடமாற்றம் குறித்துக் குற்றம்சாட்டியுள்ள நிலையில் தற்போது இந்த இடம் மாற்றத்தை எதிர்த்த 900 ஊழியர்களுக்குச் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது கூடுதல் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுமார் 2000 ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உங்களின் பணியிடத்தை மாற்றப்படுகிறது என ஈமெயிலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது மட்டும் அல்லாமல் அடுத்த 2 வாரத்திற்குள் உங்களின் புதிய வொர்க் லொகேஷனுக்குச் சென்று லாகின் செய்ய வேண்டும் என்று கண்டிப்பான தொனியுடன் உத்தரவு வந்தது. இந்த உத்தரவை எதிர்த்தவர்களின் சம்பளம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் NITES அமைப்பு சுமார் 300 ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து மத்திய தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திற்குக் கடிதம் அனுப்பியது. இதை வாயிலாக நேற்று டிசிஎஸ் நிறுவனத்திற்கு மகாராஷ்டிரா அரசின் தொழிலாளர் துறை டிசிஎஸ் நிறுவன அதிகாரிகளை நேரில் வந்து விளக்கம் கொடுக்க மராத்தி மொழியில் அச்சிடப்பட்ட நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
மேலும் 14 நாட்களுக்குள் புதிய பணியிடத்திற்குச் செல்ல மறுத்த காரணத்தால் நிறுவனத்தின் விதிமுறைகளை பின்பற்றதாக காரணத்தினால் உங்களது சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்றும், ஒரு ஊழியர்களுக்கு டிசிஎஸ் நிர்வாகம் ஈமெயில் மூலம் பதில் அளித்துள்ளது, இதேபோல் சில போர்டல்களைப் பயன்படுத்துவதையும் தடை செய்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications