இந்தியாவில் ஐடி வேலை என்றாலே டிசிஎஸ் நிறுவனம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டு தங்கள் ஊழியர்களில் 2 சதவீதம் பேர் அதாவது 12,000க்கும் அதிகமான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு ஒட்டுமொத்த ஐடி துறையையும் அதிர்ச்சி அடைய வைத்தது. முன் அறிவிப்பில்லாமல் ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றனர், திடீரென அழைத்து வேலை இல்லை என்கின்றனர், பலரை கட்டாய ராஜினாமா செய்ய வைக்கின்றனர் என பல்வேறு ஐடி ஊழியர்களும் டிசிஎஸ் மீது சமூக வலைத்தளங்களில் புகார் கூறினர்.

எனவே மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழிலாளர் நலத்துறை ஆணையங்களிடம் தொடர்ச்சியாக புகார்களும் முன் வைக்கப்பட்ட வண்ணம் இருந்தது. இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு பெரிய தலைவலி உருவாகி இருக்கிறது. அதாவது நிறுவனத்தில் மூத்த நிலை ஊழியர்கள் பலரும் திடீரென ராஜினாமா செய்கிறார்களாம். மொத்தமுள்ள 1800 சீனியர் எக்ஸிக்யூட்டிவ் ஊழியர்களில் கடந்த 8 மாதங்களில் 300 பேர் திடீரென வேலையில் இருந்து நின்றுள்ளனர்.
டிசிஎஸ் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்தது ஊழியர்களின் இந்த திடீர் ராஜினாமாவுக்கு காரணங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. வைஸ் பிரசிடெண்ட், பிரின்சிபல் கன்சல்டண்ட், சீனியர் வைஸ் பிரசிடெண்ட் என பல ஆண்டுகளாக நிறுவனத்தோடு நெருக்கமாக வேலை செய்த பலரும் இந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு டிசிஎஸ் நிறுவனம் திடீரென ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதுவும் மூத்த ஊழியர்கள் மத்தியில் அச்ச உணர்வையும் பணிபாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியதாக மிண்ட் செய்தி கூறுகிறது. நீண்ட கால வேலை, நல்ல சம்பளம் இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் வேலை போகும் என்ற சூழலில் வேலை செய்ய வேண்டாம் என பலரும் தாங்களாகவே வெளியேறுவதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால் இப்படி முக்கிய பதவிகளில் இருக்கக்கூடிய ஊழியர்கள் திடீரென வெளியேறுவது நிறுவனத்திற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான உறவு நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் டிசிஎஸ் வேலை என்றாலே லைஃப் செட்டில் என்ற சூழல் இருந்தது. ஆனால் ஏஐ வருகை அந்த நிலையை மாற்றிவிட்டது. மெயில் வந்துவிட்டால் யாராக இருந்தாலும் நிறுவனத்தை விட்டு வெளியேறி தான் ஆக வேண்டும்.
டிசிஎஸ் மட்டுமல்ல இந்தியாவின் முன்னனி ஐடி நிறுவனங்கள் பலவற்றிலும் இது தான் நிலைமை. ஏஐ வருகையால் வேலை சுலமடைந்ததால் நிறுவனங்களும் மல்டி லெவல் மேனேஜ்மெண்ட் என்ற கட்டமைப்பை குறைக்கிறதாம், இதனால் மூத்த ஊழியர்கள் வேலையை விட்டாலும் அதற்கேற்ப மறுகட்டமைப்பு செய்து கொள்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications