விசாகப்பட்டினம்: டிசிஎஸ் நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் மிகப்பெரிய ஐடி அலுவலகத்தை நிறுவ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதலே முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் பல்வேறு துறை சார்ந்த தலைவர்களையும் சந்தித்து ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். சந்திரபாபு நாயுடு அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக ஆந்திர பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம் நகரில் டிசிஎஸ் நிறுவனம் ஐடி அலுவலகத்தை அமைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10,000 ஊழியர்கள் பணி புரியும் வகையில் இந்த அலுவலகம் இருக்கும் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் நர லோகேஷ் மும்பையில் செவ்வாய்க்கிழமை அன்று டாடா குழுமத்தின் தலைமையகத்திற்கு சென்று டாடா குழுமத்தின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
குறிப்பாக டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரனை சந்தித்து முக்கியமான ஆலோசனையில் ஈடுபட்டார். இதனை அடுத்து தான் டிசிஎஸ் நிறுவனம் விசாகப்பட்டினத்தில் 10,000 ஊழியர்கள் பணி செய்யக்கூடிய வகையிலான பெரிய அலுவலகத்தை நிறுவ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே மற்றொரு தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்சிஎல் விசாகப்பட்டினத்தில் தங்களின் கிளையை அமைப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அது மட்டும் இன்றி லூலு குழுமம், ப்ரூக்ஃபீல்டு, ஓபராய், சஸ்லான் எனர்ஜி ஆகிய நிறுவனங்களும் ஆந்திர பிரதேச மாநிலத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக இருப்பதாக அண்மையில் தகவல் வெளியிட்டன.
இதனிடையே டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய ஐடி அலுவலகத்தை விசாகப்பட்டினத்தில் அமைப்பது தொடர்பாக பேட்டியளித்துள்ள அமைச்சர் லோகேஷ் கார்ப்பரேட் நிறுவனங்கள் எளிதாக வந்து தொழில் செய்யக்கூடிய வகையிலான சிறந்த கொள்கைகளை தங்களின் அரசு உருவாக்கி இருப்பதாக கூறினார்.
இந்தியாவிலேயே தொழில் தொடங்குவதற்கு உகந்த நம்பர் 1 மாநிலம் ஆந்திர பிரதேசம் என்ற நிலையை எட்டுவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும் டிசிஎஸ் நிறுவனம் தொழில் தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டு இருப்பது இதன் முக்கிய மைல்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவரது மகனும் ஐடி துறை அமைச்சருமான நர லோகேஷூக்கு விசாகப்பட்டினத்தில் டிசிஎஸ் அலுவலகத்தை கொண்டு வருவதற்காக எடுத்து கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஆந்திர மாநிலத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications