2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வீட்டு வாடகை செலுத்துதலுக்கான டிடிஎஸ் (Tax Deducted at Source) விகிதத்தில் மாற்றங்களை அறிவித்தார். இதன்படி வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வீட்டு வாடகை செலுத்துதலுக்கான டிடிஎஸ் விகிதம் என்பது 5% இல் இருந்து 2% ஆக குறைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் வாடகை செலுத்தக்கூடிய வாடகைதாரர்கள் வாடகை தொகையில் 5% ஐ டிடிஎஸ்-ஆக பிடித்தம் செய்து வருமான வரித்துறையிடம் டெபாசிட் செய்ய வேண்டும்.

வருமான வரி சட்டம் 1961இன் பிரிவு 194IB -இன் கீழ் இந்த விதிமுறையானது அமலில் இருந்து வருகிறது. வாடகைதாரர் டிடிஎஸ் தொகையை நிதியாண்டின் இறுதியில் அல்லது மாதாந்திர வாடகை செலுத்தும் நாளுக்கு முன்பு அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் காலாவதி ஆவதற்கு முன்பு என இந்த மூன்றில் ஏதேனும் ஒரு தருணத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம்.
வருமான வரி கணக்கில் டிடிஎஸ் காட்டப்படும். அதாவது வீட்டு உரிமையாளரின் பான் எண் மற்றும் வாடகைதாரரின் பான் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு டிடிஎஸ் செலுத்தப்படுகிறது.
வீட்டு உரிமையாளர் தங்களுடைய வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது இந்த டிடிஎஸ் தொகையை பெற்றுக் கொள்ளலாம். தற்போதுள்ள சட்டப்படி வீட்டு வாடகையில் (மாதம் 50,000க்கு மேல் வாடகை இருந்தால் மட்டும்) 5% தொகையை டிடிஎஸ் ஆக பிடிக்க வேண்டும். வீட்டு உரிமையாளரிடம் செல்லுபடியாக கூடிய பான் எண் இல்லை என்றால் வாடகைக்கு குடியிருப்பவர் டிடிஎஸ்-ஐ 20% என உயர்த்திக் கொள்ளலாம்.
தற்போது அரசு இந்த 5% தொகையை தான் 2% என குறைத்துள்ளது. உதாரணமாக மாதத்திற்கு 51,000 ரூபாய் வீட்டு வாடகை செலுத்துபவர் ஒரு ஆண்டுக்கு 6,12,000 ரூபாய் வாடகையாக செலுத்துவார். இதில் 5 சதவீத தொகை அதாவது 30600 ரூபாய் ஆண்டு இறுதியான மார்ச் மாத வாடகையில் குறைத்து அந்த தொகையை டிடிஎஸ் ஆக கணக்கு காட்ட வேண்டும். இல்லை என்றால் மாதந்தோறும் வாடகை தொகையில் 5% தொகையை டிடிஎஸ் ஆக பிடித்தம் செய்ய வேண்டும். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படையில் 5% என்பது 2% சதவீதம் ஆகி உள்ளது. எனவே 12,240 ரூபாயை மட்டும் டிடிஎஸ் என பிடித்தம் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications