சென்னை: இந்தியாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆண்களை விட பெண்களுக்கு 30 சதவீதம் குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது என ஒரு ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. TeamLease Digital என்ற தளம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் ஊதியங்கள் குறித்து ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது.
இதன்படி தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய துறைகளிலும் கூட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு 22 முதல் 30 சதவீதம் வரை குறைவான ஊதியம் ஊதியமே கிடைப்பதாக இந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

ப்ராடக்ட் மேனேஜர், டேட்டா சயின்டிஸ்ட் , டேட்டா இன்ஜினியர் உள்ளிட்ட வேலைகளில் சராசரியாக 22 முதல் 30 சதவீதம் வரை பெண்கள் குறைவான ஊதியம் பெறுகின்றனர். குறிப்பாக ஃபிரெஷர் அளவிலான வேலைகளில் பெண்களுக்கு ஆண்களை விட 15. 38% குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.
ஐடி துறையை பொறுத்தவரை 20.50 லட்சம் பெண்கள் வேலை செய்கின்றனர். அதேபோல பன்னாட்டு நிறுவனங்களின் GCC மையங்களில் தற்போது 4.82 லட்சம் பெண்கள் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 35 சதவிகிதம் வரை உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இருந்தாலும் பெரிய நிறுவனங்களில் கூட ஒரே பதவிக்கு ஆண்களுக்கு ஒரு ஊதியமும் பெண்களுக்கு ஒரு ஊதியமும் என நிர்ணயம் செய்யப்படுவது இந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதில் வெளியிட்டுள்ள தகவலின் படி ப்ராடக்ட் மேனேஜர் பதவியில் இருக்கும் ஆணுக்கு 29 லட்சம் ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டால் அதே பதவியில் இருக்கும் பெண்ணுக்கு 23 லட்சம் மட்டுமே ஊதியமாக கிடைக்கிறது .டேட்டா சயின்டிஸ்ட் ஆக வேலை செய்யும் ஆணுக்கு 16.5 லட்சம் ரூபாய் சராசரியாக ஊதியம் வழங்கப்படுகிறது எனில் அதே பதவியில் இருக்கும் பெண்ணுக்கு 13 லட்சம் ரூபாய் ஊதியமாக கிடைக்கிறது. டேட்டா இன்ஜினியர் பதவியில் 10 லட்சம் ரூபாய் ஊதியம் ஆணுக்கு வழங்கப்படுகிறது என்றால் பெண்ணுக்கு 8 லட்சம் ரூபாயாக ஊதியம் கிடைக்கிறது.
அது மட்டும் இன்றி ஃபிரெஷர் அளவில் ஆண்களுக்கு 7.5 லட்சம் ரூபாய் ஊதியமும் பெண்களுக்கு 6.5 லட்சம் ரூபாய் ஊதியமும் கிடைக்கிறது. இதுவே 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட ஆணுக்கு 19.5 லட்சம் ரூபாய் ஊதியமும் பெண்களுக்கு 17.5 லட்சம் ஊதியமும் சராசரியாக வழங்கப்படுகிறது. இதில் ஊதிய இடைவெளி 11.43 சதவீதமாகும். 10 ஆண்டுகாலம் பணி அனுபவம் பெற்று இருந்தால் கூட ஆண்களுக்கு நிகரான ஊதியம் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை.
ஒரு ஆணுக்கு 36 லட்சம் ரூபாய் ஊதியம் கிடைக்கிறது என்றால் அதே பணியில் அதே அனுபவம் கொண்ட ஒரு பெண்ணுக்கு 32.2 லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதில் ஊதிய இடைவெளி என்பது 11.80 சதவீதமாக இருக்கிறது.
நிறுவனங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் ,வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமன் செய்வதற்கு தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும், வெளிப்படையான சம்பளக் கொள்கைகள் ஆகியவை நடைமுறைக்கு வரும்போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான இந்த ஊதிய இடைவெளி என்பது குறையும் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications