சர்வதேச அளவில் டெக் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை தொடர்கின்றன. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் கூட பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்தன. இந்த பணி நீக்க நடவடிக்கை 2025 ஆம் ஆண்டிலும் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2023 ஆம் ஆண்டினை பொருத்தவரை முதல் ஆறு மாத காலத்தில் சர்வதேச அளவில் 2.12 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் 27 ஆயிரம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். 2024 ஆம் ஆண்டிலும் இந்த போக்கு நீடித்தது. இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்கள் 2000 முதல் 3000 பேர் வரை பணிநீக்கம் செய்தன. இதில் ஐடி, ரீடெய்ல் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளும் அடங்கும்.

பொருளாதார மந்த நிலையே இவ்வாறு நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தன என்கின்றனர் இத்துறை சார்ந்து இயங்கக்கூடிய நிபுணர்கள். நிறுவனங்கள் தங்களுடைய செயல்பாட்டு செலவினங்களை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாலேயே ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக கூறுகிறார் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜியில் பேராசிரியராக இருக்கும் அர்ச்சனா ஸ்ரீவாஸ்தவா.
அது தவிர கடந்த சில ஆண்டுகளாகவே செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து விட்டன. இதனால் சில செயல்களை மனிதர்கள் மாற்றாக தொழில்நுட்பங்கள் மூலம் நிறுவனங்களால் செய்து கொள்ள முடிகிறது. இதுவும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பதற்கு ஒரு காரணமாக அமைந்திருப்பதாக கூறுகிறார். நிறுவனங்களுக்கு தற்போது தேவைப்படக்கூடிய திறமையான பணியாளர்கள் கிடைக்காமல் இருப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு தேடி வந்தாலும் நிறுவனங்கள் தேடக்கூடிய திறன்கள் அவர்களிடம் இல்லாமல் இருப்பது ஒரு காரணமாக அவர் கூறுகிறார். ஒவ்வொரு துறையும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றமடைகின்றன. எனவே அங்கே வேலை செய்ய வேண்டியதற்கான திறன்களும் மாறுகின்றன. அதனை வளர்த்துக் கொண்டு இருப்பவர்கள் தொடர்ந்து வேலையில் நீடிக்கிறார்கள் அது முடியாமல் இருப்பவர்கள் பணி நீக்க சூழலில் சிக்கிக் கொள்கிறார்கள் என கூறுகிறார்.
இதனிடையே உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு எதிர்கால வேலைகள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு பணிகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது என்பதை குறிப்பிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக சுமார் 41% நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
2030ஆம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 92 மில்லியன் மக்கள் வேலை வாய்ப்பை இழப்பார்கள் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதேவேளையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 170 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் அதற்கேற்ற வகையில் மக்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.
எனவே பணி நீக்கத்தை எண்ணி அச்சப்படாமல் அதற்கு நிகரான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications