பெங்களூரு: இந்தியாவின் பன்முகத்தன்மை எப்போதுமே வெளிநாட்டவர்களுக்கு வியப்பை தரக் கூடியது. கலாச்சாரத்தின் சிறந்தவர்கள் என பெயர் பெற்ற ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒரு CEO, இந்தியாவிற்கு வந்து ஒரு மாத காலத்திலேயே நமது பன்முகத்தன்மை, மதிப்புகள் ஆகியவை குறித்து வியப்பு தெரிவித்துள்ளார்.
டெக் ஜப்பான் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான நவோடாகா நிஷியாமா (Naotaka Nishiyama) கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூருக்கு வந்துள்ளார். இந்த ஒரு மாத காலத்தில் இந்தியாவில் தனக்கு கிடைத்த அனுபவங்களை அவர் தன்னுடைய லின்கிடுன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் உலகத்திற்கு தற்போது இந்தியாவின் தலைமை தான் தேவை என கூறியுள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மதிப்புகள் குறித்து அவர் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
உலகம் இன்று வாழ்வதற்கு ஒரு குழப்பமான இடமாக இருக்கிறது, தற்போது பல்வேறு விஷயங்களிலும் அனுபவங்களை பெற்றிருக்கும் இந்தியா இந்த உலகை முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.
உலகிற்கு இந்தியாவின் தலைமை தேவை என எழுதியுள்ள நிஷியாமா நான் இந்தியாவிற்கு குடிபெயர்ந்து ஒரு மாதம் ஆகிவிட்டது இந்தியாவில் உள்ள மதிப்புகளையும் பன்முகத் தன்மைகளையும் கண்டு நான் மிகவும் வியப்படைகிறேன் என தெரிவித்துள்ளார்.
பல்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் மதிப்புகளைக் கொண்டு ஒரு பெரிய நாடாக இந்தியா இருக்கிறது, இது ஒரு அதிசயம் எனக் கூறியுள்ளார். இந்தியா தற்போது தேர்தல் பருவத்தில் இருப்பதால் தலைமை பற்றி சிந்திக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யநாதெல்லா, கூகுள் தலைமை செயல் நிர்வாகி சுந்தர் பிச்சை ஆகியோரை உதாரணங்களாக மேற்கோள் காட்டியிருக்கும் நிஷியோமா இந்தியா போட்டி மற்றும் ஒத்துழைப்பு இரண்டையும் உள்ளடக்கியது என்றும் உலகளாவிய அமைப்பை வழி நடத்தும் திறன் இந்தியாவிற்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தொழில் உலகத்தில் சுந்தர் பிச்சை மற்றும் சத்யநாதெல்லா இரண்டாம் தலைமுறை அமெரிக்கர்கள் கிடையாது அவர்கள் இந்தியாவில் பிறந்து இந்தியாவில் கல்வி பயின்று பட்டப்படிப்புக்காக அமெரிக்காவிற்கு சென்றவர்கள் வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால் போட்டி மற்றும் ஒத்துழைப்பு இரண்டையும் உள்ளடக்கியதால் மட்டுமே அவர்களால் தலைமை தாங்கும் திறன் வாய்ந்தவர்களாக உயர முடிந்திருக்கிறது என கூறியுள்ளார்.
நிஷியாமாவின் இந்த பதிவு லிங்குடின் தளத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது . இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையுடன் இருக்கும் ஒரு நாடு என ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா குறித்த உங்களது பார்வைக்கு நன்றி என ஒரு பயனர் சுட்டிக்காட்டி உள்ளார். தான் ஓராண்டு ஜப்பானில் வசித்து இருப்பதாகவும் இந்தியா கலாச்சார ரீதியாக ஜப்பானியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்றும் மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications