இந்தியாவின் 5வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டெக் மஹிந்திரா இன்று தனது ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே டிசிஎஸ், ஹெச்சிஎல், விப்ரோ, இன்போசிஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் 1 லட்சத்திற்கும் அதிகமாக ஊழியர்களை கொண்டு இயங்கும் டெக் மஹிந்திரா மோசமான ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
ஐடி துறைக்கு 2023 ஆம் ஆண்டு மோசமாக வர்த்தக காலமாக இருந்து வரும் வேளையில் டெக் மஹிந்திரா கடந்த ஆண்டின் ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் சுமார் 39 சதவீதம் குறைவான லாபத்தை பதிவு செய்து பெரும் அதிர்ச்சியை ஐடி ஊழியர்களுக்கும், அதன் முதலீட்டாளர்களுக்கும் கொடுத்துள்ளது.

டெக் மஹிந்திரா நிறுவனம் 2022 ஆம் நிதியாண்டு ஜூன் காலாண்டில் 1,131 கோடி ரூபாயை மொத்த லாபமாக பெற்ற நிலையில், ஜூன் 2023 காலாண்டில் வெறும் 693 கோடி ரூபாயை மட்டுமே மொத்த லாபமாக பெற்றுள்ளது, இது கிட்டதட்ட 39 சதவீதம் சரிவு. டிசிஎஸ், ஹெச்சிஎல், விப்ரோ, இன்போசிஸ் ஆகியவை ஜூன் 2023 காலாண்டில் லாபம் மற்றும் வருவாய் வளர்ச்சியை பதிவு செய்த நிலையில் டெக் மஹிந்திரா நிறுவனம் சரிவை சந்தித்துள்ளது.
டெக் மஹிந்திரா நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் ஜூன் காலாண்டில் 4 சதவீத உயர்வுடன் 13,470 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை பெற்றுள்ளது. டாலர் மதிப்பீட்டில் இது 1.601 பில்லியன் டாலர் வருடாந்திர அடிப்படையில் 2 சதவீதம் சரிவு, காலாண்டு அடிப்படையில் 4 சதவீதம் சரிவு.
மேலும் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் EBITDA அளவு முதல் காலாண்டில் 29 சதவீதம் சரிந்து 1,338 கோடி ரூபாயாக உள்ளது. டெக் மஹிந்திரா-வின் துறை வாரியான வர்த்தகத்தில் கம்யூனிகேஷன்ஸ், மீடியா மற்றும் பொழுதுபோக்கு பிரிவின் வருவாய் 8 சதவீதமும், BFSI பிரிவு வருவாய் 5.4 சதவீதமும் சரிந்துள்ளது.
ஜூன் காலாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனம் 359 மில்லியன் மதிப்பிலான புதிய டீல்களை பெற்றிள்ளது, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 802 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை பெற்றிருந்தது. இந்நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 15 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதன் அளவு 22 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெக் மஹிந்திரா-வின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 4,103 பேர் குறைந்து 1,48,297 ஆக உள்ளது. மேலும் பணம் மற்றும் பணத்திற்கு இணையான மதிப்பாக 7,701 கோடி ரூபாயை வைத்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பங்குகள் 1.08 சதவீத சரிவுடன் 1,144 ரூபாயாக முடிந்துள்ளது.


Click it and Unblock the Notifications