டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய முன்னணி ஐடி நிறுவனங்கள் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில் இன்று டெக் மஹிந்திரா நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் டெக் மஹிந்திரா இந்த ஆண்டு 93% அதிகமான நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் ரூ.510 கோடி லாபம் ஈட்டியிருந்த டெக் மஹிந்திரா இக்காலாண்டில் 983 கோடி ரூபாயை லாபமாக பெற்றுள்ளது.

ஆனால் செப்டம்பர் காலாண்டில் பதிவான ரூ.1,250 கோடி லாபத்தை பார்க்கும் போது 21% குறைந்துள்ளது முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதை தொடர்ந்து டிசம்பர் 2024 காலாண்டின் வருவாய் ரூ.13,286 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் 1.4% அதிகரிப்பாகும். இருப்பினும், டாலர் அடிப்படையில் வருவாய் 0.4% குறைந்து 1,567 மில்லியன் டாலராக உள்ளது. கடந்த காலாண்டை ஒப்பிடும்போது வருவாய் 1.3% குறைந்துள்ளது.
டெக் மஹிந்திராவின் வருவாய் சிறிய அளவில் குறைந்திருந்தாலும், வலுவான நிதி செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது என கூற முக்கியமான காரணம் EBITDA அளவு. இக்காலாண்டில் EBITDA அளவு காலாண்டு அடிப்படையில் 3.4% அதிகமாகவும், வருடாந்திர அடிப்படையில் 57.8% ஆகவும் அதிகரித்து ரூ.1,809 கோடியாக உயர்ந்துள்ளது.
இதேவேளையில் டெக் மஹிந்திராவின் EBITDA விகிதம் 13.6% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த காலாண்டை ஒப்பிடும்போது 40 அடிப்படை புள்ளிகள் அதிகம், கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடும்போது 480 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.
டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த காலாண்டில் 745 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் 95.4% அதிகமாகும், ஆனால் டெக் மஹிந்திராவின் சக போட்டி நிறுவனங்கள் அனைத்தும் பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை டிசம்பர் காலாண்டில் பெற்றுள்ளது.
ஆனால் மோஹித் ஜோஷி தலைமையிலான டெக் மஹிந்திராவின் நிர்வாகத்திற்கு 95.4% அதிக மதிப்பிலான திட்டங்களைப் பெற்றுள்ளது என்பது ஒரு நல்ல துவக்கமாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications