இந்தியாவில் ஒவ்வொரு வருடமும், கல்லூரியில் இருந்து வெளியேறும் பட்டதாரிகளுக்கு இருக்கும் கனவு, டாப் ஐடி நிறுவனத்தில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்பது தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் கல்லூரியில் இருந்து பிரஷ்ஷர்ஸ் பட்டதாரிகளை பணிக்கு சேர்ப்பதை குறைத்து வருகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் மாதம் துவங்கியதில் இருந்து டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகியவை தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில், இன்று டெக் மஹிந்திரா நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

தகவல் தொழில்நுட்ப சேவை துறையில் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டெக் மஹிந்திரா நிறுவனம், மார்ச் 31 உடன் முடிந்த காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று வெளியிட்டு உள்ளது.
டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவியேற்று மோஹித் ஜோஷி வெளியிடும் முதல் காலாண்டு முடிவு என்பதால் மிகவும் ஸ்பெஷல். ஆனால் நிதியியல் முடிவுகள் முதலீட்டாளர்களைக் கவரவில்லை என்பது முக்கியமான விஷயமாக உள்ளது.
மோஹித் ஜோஷி தலைமையிலான டெக் மஹிந்திரா மார்ச் காலாண்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நிறுவனத்தின் மொத்த லாப அளவு 40.9 சதவீதம் குறைந்து ரூ.661 கோடியாக உள்ளது. இதேவேளையில் நடப்பு நிதியாண்டில் 3ஆம் காலாண்டு லாப அளவீடுகளை ஒப்பிடும்போது 29.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இக்காலாண்டில் லாபத்தில் ஏற்பட்ட கடுமையான சரிவுக்கு முக்கியமான காரணம், தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட முக்கிய துறைகளில் தொடரும் மந்தநிலை தான்.
இதை தொடர்ந்து கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டை ஒப்பிடும்போது, இதன் ஒருங்கிணைந்த வருவாய் 6.2 சதவீதம் குறைந்து ரூ.12,871 கோடியாக இருந்தது. டிசம்பர் காலாண்டை ஒப்பிடும்போது டெக் மஹிந்திராவின் வருவாய் 1.8 சதவீதம் குறைந்துள்ளது. இதன் மூலம் மோஹித் ஜோஷி வந்த பின்பு வருவாய் அளவீட்டில் கணிசமான சரிவை பதிவு செய்தாலும், லாபத்தில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது டெக் மஹிந்திரா.
மேலும் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் EBIT விகிதம் 7.4 சதவீதமாக இருந்தது, இது முந்தைய காலாண்டில் பதிவான 5.4 சதவீதத்தை விட அதிகமாகும். 2024 முழு நிதியாண்டின் வருவாய் ரூ.51,996 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.4 சதவீதம் குறைவு. மொத்த லாபம் ரூ.2,358 கோடியாக இருந்தது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 51.2 சதவீதம் குறைவு.
2024 மார்ச் 31ம் தேதி முடிந்த நிதியாண்டுக்கான டெக் மஹிந்திரா அதன் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.28 என்ற இறுதி டிவிடெண்ட் தொகையை வழங்க நிர்வாக குழு பரிந்துரைத்துள்ளது.


Click it and Unblock the Notifications