இந்திய தகவல் தொழில்நுட்ப துறை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்தாலும், கடந்த ஒரு வருடத்தில் அதிகப்படியான பங்கு சரிவை எதிர்கொண்டு வரும் டெக் மஹிந்திரா புதிய சிஇஓ-வான மோஹித் ஜோஷி-ஐ நியமித்த மகிழ்ச்சியுடனும், நம்பிக்கை உடனும் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
டெக் மஹிந்திரா நிறுவனம் மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபமாக 1,118 கோடி ரூபாயை பெற்றுள்ளது, ஆனால் இது கடந்த வருட மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் சுமார் 25.8 சதவீதம் குறைவாகும். டெக் மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு இதே மார்ச் காலாண்டில் சுமார் 1,506 கோடி ரூபாயை லாபமாக பெற்று இருந்தது.

மேலும் இக்காலாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனம் தன் ஆப்ரேஷன் மூலம் 13,718 கோடி ரூபாய் அளவிலான வருவாயை பெற்றுள்ளது. வருவாய் அடிப்படையில் மார்ச் 2022 மற்றும் மார்ச் 2023 காலாண்டை ஒப்பிடுகையில் 13.2 சதவீதம் அதிகரித்து உள்ளது.
டெக் மஹிந்திராவின் லாபம் பெரிய அளவில் சரிந்த நிலையில் முதலீட்டாளர்களின் எதிரொலிகளை சமாளிக்க இந்நிறுவனத்தின் நிர்வாக குழு ஒரு பங்கிற்கு சுமார் 32 ரூபாயை இந்த நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது. இதன் மூலம் டெக் மஹிந்திரா தனது முதலீட்டாளர்களுக்கு FY23 ஆம் நிதியாண்டில் ஒரு பங்கிற்கு மொத்தம் 50 ரூபாயை ஈவுத்தொகையாக கொடுத்துள்ளது.
மார்ச் காலாண்டில் EBITDA அளவு வருடாந்திர அடிப்படையில் 3.2% குறைந்து 2,021 கோடி ரூபாயாக இருந்தது. இது காலாண்டு அடிப்படையில் 5.7 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் மார்ச் 2023 காலாண்டில் டெக் மஹிந்திராவின் ஒரு பங்குக்கான வருவாய் (EPS) 12.62 ஆக உள்ளது.
2023 ஆம் ஆண்டில் மொத்தமாக Tech Mahindra-வின் வரிக்கு பிந்தைய லாப அளவு 4,832 கோடி ரூபாயாக உள்ளது, இது ஆண்டுக்கு 13.2 சதவீதம் குறைந்துள்ளது. 2023 நிதியாண்டில் அதன் வருவாய் 53,290 கோடி ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications