டெக் மஹிந்திரா நிறுவனத்தில் 30,000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்ற சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளை இந்நிறுவனம் முழுமையாக மறுத்துள்ளது. திங்களன்று பங்குச் சந்தைக்கு டெக் மஹிந்திரா அளித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், இத்தகைய எந்த திட்டமும் இல்லை என்று தெளிவாகக் கூறியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவிய இந்த தகவல் தவறானது என்றும், நிறுவனம் எந்த பெரிய அளவிலான பணிநீக்கத்தையும் திட்டமிடவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில், குறிப்பாக X தளத்தில், டெக் மஹிந்திரா 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது என்ற பதிவுகள் வைரலாகின. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்த காரணத்தால் ஊழியர்களின் தேவை பெரிய அளவில் குறைந்துள்ளால் பணிநீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டது.

இத்தகைய பதிவுகள் இந்தியா முழுவதும் உள்ள டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தின. ஆனால் இந்நிறுவனம் இவற்றை மறுத்து, இது முற்றிலும் தவறான தகவல் என்று தெளிவுபடுத்தியுள்ளது. பங்குச் சந்தை விதிமுறைகளின்படி, இத்தகைய வதந்திகளை மறுக்க வேண்டிய கடமை உள்ளதாகவும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
டெக் மஹிந்திரா உலக அளவில் சுமார் 1.5 லட்சம் ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது. சமீப காலங்களில் இந்நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கை பெரிய அளவில் மாற்றமில்லாமல் நிலையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. டிசிஎஸ் நிறுவனம் சமீபத்தில் ஐடி ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த பின்னரும் பணிநீக்கம் குறித்த எந்தொரு முடிவை எடுக்காத டெக் மஹிந்திரா திடிரென இத்தகைய அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
டெக் மஹிந்திரா நிறுவனம் பணிநீக்கம் செய்யவில்லை என்றாலும், உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனத்தில் முடிவடைந்த திட்டங்கள் மற்றும் குறைந்த பயன்பாட்டு திட்டங்களில் இருந்து ஊழியர்களை புதிய பணிகளுக்கு மாற்றி வருகிறது. இது பணிநீக்கம் இல்லாமல் உற்பத்தித்திறனை உயர்த்தும் உத்தியாகும்.
மேலும் இந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மாற்றத்தில் பெரும் முதலீடு செய்து வருகிறது. சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து ஆன்டாலஜி அடிப்படையிலான ஏஜென்டிக் AI தளத்தை அறிமுகப்படுத்தியது. இது டெலிகாம் மற்றும் நிறுவன டேட்டா நவீனமயமாக்கலை விரைவுபடுத்தும். AI-யை அதிகம் பயன்படுத்தினாலும், பெருமளவு பணிநீக்கம் செய்யும் திட்டம் இல்லை என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications