சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைகளை எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டுக்கு உகந்த நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கான சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் ( National Highways for Electric Vehicles ) என்ற திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நெடுஞ்சாலைகள் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டுக்கு உகந்த சாலைகளாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைகளை எலக்ட்ரிக் வாகனங்களுக்கான நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கான தொழில்நுட்ப ரீதியான சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஐந்து பிரதான நெடுஞ்சாலைகளில் நடத்தப்படுகிறது.

திருச்சி முதல் சென்னை, திருச்சி முதல் மதுரை, கோயம்புத்தூர் முதல் உளுந்தூர்பேட்டை, கிருஷ்ணகிரி முதல் மதுரை மற்றும் மதுரையிலிருந்து கன்னியாகுமரி ஆகிய ஐந்து முக்கிய சாலைகளில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.
முதல் கட்டமாக இதில் சென்னையிலிருந்து திருச்சி வரையிலான 332 கிலோமீட்டர் நீளம் கொண்ட நெடுஞ்சாலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்கள் ஆகியவற்றை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். அது மட்டும் இன்றி முதன்முறையாக ஜீரோ கார்பன் வெளியீடு கொண்ட சரக்கு வாகனங்களும் இந்த சோதனை ஓட்டத்தில் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
முன்னதாக எலக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் எலக்ட்ரிக் எஸ்யூவி வாகனங்கள் கொண்டு இந்த சாலையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. உலக எலக்ட்ரிக் வாகன தினத்தை ஒட்டி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கைடென்ஸ் தமிழ்நாடு அமைப்பின் செயல்பாட்டு இயக்குனர் அலர்மேல் மங்கை கலந்து கொண்டு இந்த சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த சோதனை ஓட்டத்தின் போது குறிப்பிட்ட நெடுஞ்சாலை பகுதியில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு எந்த வகையிலான உள்கட்டமைப்பு வசதிகள் தற்போது இருக்கின்றன, அதை இன்னும் எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பன போன்ற அனைத்து விஷயங்களும் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது.
தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த சோதனை ஓட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் இந்த நெடுஞ்சாலை பகுதிகளின் முக்கியமான இடங்கள் கண்டறியப்பட்டு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேசிய நெடுஞ்சாலைகள் என்ற ஒரு பிரத்யேக திட்டத்தை மத்திய அரசு இதற்காக கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டத்தின் செயல்பாட்டு இயக்குனரான அபிஜித் சின்ஹா சரக்கு போக்குவரத்து மற்றும் லாரிகள் இயக்கத்தில் கார்பன் வெளியீட்டை பூஜ்ஜியம் என்ற அளவுக்கு கொண்டு வருவது தான் தங்களது இலக்கு என்றும் அதற்காகவே நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications