வெளிநாடுகளில், குறிப்பாக ஜப்பானில் வேலை தேடிச் செல்லும் இந்திய இளைஞர்கள் எதிர்கொள்ளும் உண்மையான நிதிச் சவால்கள் குறித்து ஒரு புதிய விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. ஜப்பானில் மென்பொருள் பொறியாளராக பணியில் சேர்ந்த விக்கி குமார் என்ற இளைஞர், தனது மாத சம்பள விவரங்களை இன்ஸ்டாகிராம் வீடியோவில் வெளியிட்டுள்ளார். இவரின் அடிப்படை சம்பளம் மாதத்திற்கு சுமார் ரூ.1.32 லட்சம் என்றாலும், அனைத்துக் கழிவுகளும் போக இவரின் கையில் கிடைப்பது வெறும் ரூ.98,000 மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொழித் தேர்ச்சி இல்லாவிட்டால் அபராதம் : அதேபோல், சம்பளம் கணிசமாக குறைய என்ன காரணம் என்பதையும் விக்கி குமார் விளக்கியுள்ளார். அவர் ஜப்பானிய மொழிக்கான ஆரம்ப நிலைத் தேர்வில் இன்னும் தேர்ச்சி பெறவில்லை. இதன் காரணமாக, அவருக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.11,250 அபராதமாக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த அபராதத்துடன், வருமான வரி மற்றும் சுகாதாரக் காப்பீடு போன்ற நிலையான பிடித்தங்களும் சேர்ந்து, சம்பளத்தைப் பாதியாக குறைக்கிறது.

விக்கி குமாரின் இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, ஆசியாவிலேயே அதிக செலவு மிகுந்த நகரங்களில் ஒன்றான டோக்கியோவில், இந்த ரூ.98,000 வருமானத்தில் ஒரு புதிய பொறியாளரால் நிம்மதியாக வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல பயனர்கள், இந்தியாவில் ஒரு புதிய பொறியாளரின் ஆண்டு சம்பளம் ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை இருக்கும் நிலையில், ஜப்பானில் இந்த சம்பளம் போதுமானதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
டோக்கியோவின் அதிக வாழ்க்கை செலவு : சமூக வலைதள பயனர்கள், டோக்கியோவின் வாழ்க்கை செலவுகளை மிக துல்லியமாக கணக்கிட்டுப் பதிவிட்டுள்ளனர். 2025-ஆம் ஆண்டில், டோக்கியோவில் ஒரு தனி நபர் வாழும் மாதச் செலவு அவரது வாழ்க்கை முறையைப் பொறுத்து ரூ.84,000 முதல் ரூ.1.96 லட்சம் வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.
அங்கு வாடகைக்கே ரூ.39,000 முதல் ரூ.45,000 வரை செலவாகும். உணவுச் செலவு ரூ.17,000, சுகாதாரக் காப்பீடு ரூ.11,000, போக்குவரத்து மற்றும் பிற செலவுகள் சுமார் ரூ.10,000 என்று பார்த்தால், கையில் கிடைக்கும் ரூ.98,000-இல் இருந்து சுமார் ரூ.75,000 முதல் ரூ.85,000 வரை செலவுகள் உடனே கரைந்துவிடும் என்று ஒரு பயனர் கூறியுள்ளார்.
அதாவதும் சேமிப்புக்கு மிக குறைந்த தொகையே மிஞ்சும், அல்லது சேமிக்கவே முடியாமல் கூட போகலாம். இந்த சூழலில், விக்கி குமார் போன்ற புதிய பொறியாளர்கள், வெளிநாட்டு வேலை கவர்ச்சியாக தோன்றினாலும், அங்கே உள்ள அதிக செலவுகள் மற்றும் மொழித் தேர்வு போன்ற நிபந்தனைகளால் பொருளாதார ரீதியில் ஒரு சவாலான நிலையில் தள்ளப்படுகிறார்கள் என்பதை இந்தப் பதிவு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications