தீபாவளிக்கு பட்டாசு விற்பனை களைக்கட்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இதை தனக்கு சாதகமாக ஒரு IT ஊழியர் பயன்படுத்தி இருக்கிறார். சமூக ஊடகத்தளங்களில் "Ray" என்ற பெயரில் அறியப்படும் இந்த டெக்கி, தனது சொந்த ஊரில் நண்பர்களுடன் இணைந்து பட்டாசு கடையை அமைத்துள்ளார். இதற்காக அவர் தனது நேரத்தை 2 பகுதிகளாக பிரித்துள்ளார். அதாவது காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் தனது வழக்கமான வேலையான கோடிங்கில் ஈடுபடுவார்.
அதன் பிறகு மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பட்டாசு கடையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வார். இது குறித்து தனது X பதிவில் இந்த நபர் பதிவிட்டுள்ளார்.

"இந்த தீபாவளிக்கு 2 நண்பர்களுடன் பட்டாசு கடையைத் திறக்கத் தயாராகிவிட்டோம், காலை 10 முதல் 4 வரை கோடிங் வேலை மற்றும் மாலை 4 முதல் 9 மணி வரை பட்டாசு கடை", என்று Ray தனது X பதிவில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது. சிலர் அவரது தொழில்முனைவோர் மனப்பான்மையை பாராட்டியுள்ளனர்.
கமெண்ட்ஸ் பகுதியில் முறையாக அனுமதி பெற்று தான் பெயரிடப்படாத இந்த பட்டாசு கடையை நடத்தி வருவதாக ரே விளக்கம் அளித்திருந்தார். தனது சொந்த ஊரில் உள்ளவர்கள் ஆன்லைன் கடைகளை நம்புவதில்லை என்றும், தீபாவளிக்கு முன்னதாக தனது வணிகம் கண்டிப்பாக நல்ல விற்பனையைத் தரும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
ஒரு X பயனர், ஆஹா! பக்கா வணிகம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இன்னொரு நபர் நைஸ் அதிக அளவு மார்ஜின் இல்லை என்றாலும் மிகவும் வேடிக்கையாக இருக்கும் என்று கமெண்ட் செய்திருந்தார். இந்துக்களின் பண்டிகையான தீபாவளி இந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி கொண்டாட்டங்கள் மொத்தம் ஐந்து நாட்கள் தொடரும்.
இந்நிலையில் யோசித்து இரண்டு வேலையும் ஒன்றாக சேர்த்து செய்ய நினைத்த அவருடைய தொழில் முனைவோர் மனப்பான்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நேற்றைய தினம் வெளியான செய்தியில் சிவகாசியில் அதிக அளவிலான பட்டாசு கடைகள் தொடங்கப்பட்டதன் காரணமாக வெடி விற்பனை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மிக முக்கியமான காரணமாக இரண்டு விஷயங்கள் கூறப்பட்டிருந்தது. ஒன்று அதிக அளவில் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டதும், மற்றொன்று ஆன்லைன் விற்பனை அதிகரித்ததும் தான் என்று சிவகாசி விற்பனையாளர்கள் தெரிவித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications