ஹைதராபாத்: அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தன்னுடைய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அதிகாரிகளோடு அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த சுற்றுப்பயணத்தில் முதலமைச்சரோடு ஐடி துறை அமைச்சர் ஸ்ரீதர் பாபு, தலைமை செயலாளர் சாந்தி குமாரி மற்றும் பிற அதிகாரிகளும் சென்று இருந்தனர். இவர்கள் கிட்டத்தட்ட 50 தொழில்முறை சந்திப்புகளை மேற்கொண்டனர். நியூயார்க், டல்லாஸ் மற்றும் கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் 3 ரவுண்ட் டேபிள் கான்ஃபரன்ஸ்களிலும் கலந்து கொண்டனர்.

தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு முதலீடுகளைக் கொண்டு வருவதற்காகவும் தெலுங்கானா மாநிலம் மற்றும் ஹைதராபாத் நகரங்களில் பல்வேறு புதிய நிறுவனங்களை நிறுவுவதற்காகவும் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக ஐதராபாத்தில் செயற்கை நுண்ணறிவு நகரத்தை உருவாக்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஹைதராபாத்தில் செயற்கை நுண்ணறிவுக்கான எதிர்கால நகரத்தை உருவாக்குவது, செமி கண்டக்டர் நிறுவனங்களை நிறுவுவது, பல்வேறு உற்பத்தி ஆலைகளை அமைப்பது என்பது தொடர்பாகவும் பல்வேறு நிறுவன தலைமை செயல் அதிகாரிகளுடனும் இவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது ஐ.டி, ஜிசிசி, லைஃப் சயின்ஸ், மருந்து, தரவு மையங்கள், கிளவுட் மற்றும் டேட்டா மையங்கள், மின்சார வாகன உற்பத்தி, பசுமை எரிசக்தி என பல்வேறு துறைகளில் தங்கள் மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு பல நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்து ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக 12 அமெரிக்க நிறுவனங்கள் தெலுங்கானாவில் மருந்து ஆய்வு தொடர்பான நிறுவனங்களை அமைக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. இது மட்டும் இன்றி அமேசான் நிறுவனம் ஏற்கனவே ஹைதராபாத்தில் இருக்கும் தங்களுடைய டேட்டா மையத்தை விரிவு படுத்துவதற்கு ஒப்புதல் தந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக அமெரிக்காவிலிருந்து தென்கொரியாவுக்கு புறப்படுவதற்கு முன்பு பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஹைதராபாத் நகரத்தை செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக மாற்றும் தங்களுடைய முயற்சிக்கு சாதகமான பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த பயணத்தில் கிடைத்திருப்பதாக கூறினார்.
இதனிடையே தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் 50க்கும் அதிகமான தொழில் ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள், மூன்று ரவுண்டு டேபிள் கான்ஃபரன்ஸ்கள் மூலம் 31,500 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும். இதன் மூலம் தெலுங்கானாவில் சுமார் 30,750 வேலை வாய்ப்புகள் உருவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications