தெலுங்கானாவில் பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் கடுமையாக குறைந்துள்ள காரணத்தினால் அங்கு வேலை பார்த்த பல பேராசிரியர்களும் வேறு ஒரு தொழிலைத் தேட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். 2020-ஆம் ஆண்டு முதலே பொறியியல் படிப்புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல மூத்த பேராசிரியர்களும் உணவு விநியோகம் செய்வது, சாலையோரங்களில் கடைகள் நடத்துவது, போன்ற பிற வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் பொறியியல் படிப்புக்கான போக்கு முற்றிலுமாக மாறி வருகிறது. மொத்தமாக உள்ள 86,943 இன்ஜினியரிங் இடங்களில் 61,587 இடங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பு மற்றும் அது சார்ந்த துறைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற முக்கிய இன்ஜினியரிங் சீட்கள் 7,458 மட்டுமே உள்ளன. மேலும் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் வெறும் 4,751 இடங்களை மட்டுமே கொண்டுள்ளன.

இதிலும் தோராயமாக 25 சதவீத சீட்கள் வருடா வருடம் நிரப்பப்படாமல் இருந்து வருகிறது. தொழில்நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழல் தான் தெலுங்கானாவில் நிலவி வருகிறது. இதன் காரணமாக தெலுங்கானாவில் 175 B.Tech கல்லூரிகளில் பல முக்கிய இன்ஜினியரிங் இட ஒதுக்கீடுகளை 75 சதவீதம் வரை கல்லூரிகள் குறைத்துள்ளது. அதற்கு பதிலாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா அனாலிடிக்ஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற படிப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது.
இதன் காரணமாக அங்கு பணிபுரிந்த ஆசிரியர்கள் வேறு வேலையை தேடிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் மாதம் ரூ.40,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை சம்பாதித்த இந்த பேராசிரியர்கள் தற்போது தினமும் ரூ.5,00 முதல் ரூ.1,000 வரை சம்பாதிப்பதற்காக போராடி வருகின்றனர். முன்னாள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியரான வி.அச்யுத் ஏற்கனவே குறைக்கப்பட்ட சம்பளத்தில் மேலும் 50 சதவீதம் குறைத்துக் கொள்ளும்படி கல்லூரி நிர்வாகம் கேட்டதால் நான் வேலையை விட்டு வெளியேறினேன் என்று கூறியுள்ளார்.
இப்போது அவர் உணவு விநியோக டிரைவராகவும், இருசக்கர வாகன ஓட்டுனராகவும் பணிபுரிகிறார். இதனால் தினமும் சுமார் 600 ரூபாய் சம்பாதிக்கிறார். பல கல்லூரிகள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவை நிறுத்திவிட்டன. இதனால் மெக்கானிக்கல் இடங்களின் எண்ணிக்கையும் வெறும் 30 ஆக குறைந்துவிட்டது என்றும் அச்யுத் கூறியுள்ளார்.
இதனால் சில முன்னாள் பேராசிரியர்கள் ஃப்ரீலான்ஸ் ஆசிரியர்களாகவும், வேறு நிறுவனங்களிலும் பணிபுரிகின்றனர். ஆனால் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டு 2 வருடங்களுக்கு மேலானாலும் கூட தொடர்ந்து வேலை வாய்ப்பின்மையை எதிர்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கானாவின் டெக்னிக்கல் இன்ஸ்டிடியூஷன் எம்பிளாய் அசோசியேசன்-இன் பொதுச்செயலாளரான டி. ஸ்ரீனிவாஸ் வர்மா அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் மோசமான நிலைமை குறித்து விவரித்துள்ளார். "40 முதல் 50 களில் உள்ள ஆசிரியர்கள் பல வருட அனுபவத்துடன் போராடி வருகின்றனர். பல முன்னணி கல்லூரிகளிலும் அவர்களை பணி அமர்த்துவதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்", என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications