உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா, அமெரிக்காவிலிருந்து ஏப்ரல் மாத இறுதியில் ஒரு சிறப்புக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பி, ஆட்டோமொபைல் ஹப்களாக இருக்கும் மாநிலங்களில் தொழிற்சாலையை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில் டெஸ்லாவை எப்படியாவது தெலுங்கானா மாநிலத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் தெலுங்கானா அரசு களமிறங்கியுள்ளது.

டெஸ்லா-வின் முதல் விருப்பத் தேர்வாக இருப்பது 3 மாநிலங்கள் என்றும் இது மேற்கிந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத், தென்னிந்தியாவில் தமிழ்நாடு ஆகியவை தான் என்றும், அமெரிக்காவில் இருந்து வரும் குழு முதல் கட்டமாக இந்த 3 மாநிலங்களிலும் இடத்தை தேடவும், மாநில அரசுடன் சலுகைகள் குறித்துப் பேசவும் உள்ளதாகத் தெரிகிறது.
எலான் மஸ்க் நிறுவனத்தின் கவனம் இந்த மூன்று மாநிலங்களின் மீதே இருக்கும், ஏனெனில் இந்த மாநிலங்கள் ஏற்கனவே ஆட்டோமொபைல் கட்டமைப்புகள் உள்ளது இதோடு ஏற்றுமதிக்கு ஏதுவாக துறைமுகங்களைக் கொண்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தில் கார்களை எளிதாகத் தயாரித்து, ஏற்றுமதி செய்ய முடியும் எனத் தகவல் அறிந்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தான் தெலுங்கானா மாநிலத்தின் ஐடி மற்றும் தொழிற்துறை அமைச்சரான ஸ்ரீதர் பாபு தனது டிவிட்டரில், டிசம்பர் 2023 முதல் தெலுங்கானா அரசாங்கம் உலகளாவிய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் டெஸ்லாவின் திட்டமிடப்பட்ட முதலீட்டு முயற்சிகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.

டெஸ்லாவை தெலுங்கானாவிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் கடந்த சில காலமாகச் செய்து வருகிறோம். டெஸ்லா நிறுவனம் தெலுங்கானாவில் அவர்களின் தொழிற்சாலையை நிறுவ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவது மட்டும் அல்லாமல், டெஸ்லாவுடனான உரையாடல் மற்றும் விவாதங்களை எங்கள் குழு செய்து வருகிறது என தெரிவித்தார்.
இந்தியாவில் டெஸ்லா 2-3 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டைச் செய்ய நிலத்தைத் தேட இந்தியாவுக்கு ஒரு குழு அனுப்புவதாகத் தகவல் வெளியான செய்தியை, தெலுங்கானாவின் முன்னாள் ஐடி அமைச்சர் கேடி ராமா ராவ் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து தான் தற்போதைய தெலுங்கானா ஐடி அமைச்சரான ஸ்ரீதர் பாபு டிவீட் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications