தெலுங்கானா மாநில அரசு, புகையிலை மற்றும் நிக்கோடினை கொண்டிருக்கும் குட்கா மற்றும் பான் மசாலா ஆகியவற்றை உற்பத்தி செய்வது முதல் ஸ்டாக் வைத்திருப்பது, விநியோகம், விற்பனை செய்வது உள்ளிட்ட அனைத்தையும் மாநிலம் முழுவதும் தடை செய்துள்ளது. இந்தத் தடை மே 24, 2024 முதல் ஒரு வருட காலத்திற்கு அமலுக்கு வரும்.
தெலுங்கானா மாநில அரசு, அம்மாநில அரசின் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், புகையிலையுடன் தொடர்புடைய நோய்களைக் குறைப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தயாரிப்புகளின் மூலம் ஏற்படும் தீய விளைவுகளை வலியுறுத்தி, தெலுங்கானா மாநில சுகாதாரத் துறை இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குட்கா மற்றும் பிற புகையிலை பொருட்களை வாயில் மெல்லும் போது, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற தீவிரமான பிரச்சனைகள் உருவாகிறது.
தெலுங்கானா அரசு புகையிலை தயாரிப்புகள் தடை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், "தெலுங்கானா மாநிலம் முழுவதும், புகையிலை மற்றும் நிக்கோடினை கொண்ட குட்கா/பான் மசாலா ஆகியவற்றின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், போக்குவரத்து மற்றும் விற்பனை ஆகியவற்றை ஒரு வருட காலத்திற்குத் தடை செய்கிறது. இந்தத் தடை மே 24, 2024 முதல் அமலுக்கு வரும்," என்று உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குட்கா மற்றும் பான் மசாலா பயன்பாட்டுடன் தொடர்புடைய தீவிரமான உடல் நல அபாயங்களைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகையிலை தயாரிப்புகள் வாய்ப்புண், வாய்ப்புற திசு விறைப்பு (oral submucous fibrosis) போன்ற பல பிரச்சனைகளுடன் தொடர்புடையவை என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.
ஞாயிறு மதியத்திற்குப் பிறகு இந்த உத்தரவு ஹைதராபாத் சந்தையைப் பெரிதும் பாதித்துள்ளது. பான் கடை உரிமையாளர்கள் புதிய விதிமுறைகளை ஏற்கத் தயாராக இருந்தாலும், இந்தத் துறை வகைப்படுத்தாமல் இருக்கும் காரணமாக அரசு பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றது.
தெலுங்கானா அரசு அறிவிப்பால் இந்த பொருட்களுக்கு அடிமையாகியுள்ள மக்கள் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் இத்துறை சார்ந்த நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.
தெலுங்கானா பான் கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முகமது சலாகுதீன் டாக்னி அவர்கள் கூறுகையில், "தெலுங்கானாவில் சுமார் 1.5 லட்சம் பான் கடைகள் உள்ளன. குட்கா தடைக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம், பல கடைகள் ஏற்கனவே அதன் விற்பனை நிறுத்திவிட்டன.
இருப்பினும், லட்சக்கணக்கான குடும்பங்கள் இந்த விற்பனை மூலம் தங்கள் வாழ்வாதாரம் சார்ந்து இருப்பதால், புகையிலை மெல்லும் பொருட்கள் மற்றும் ஜர்தா ஆகியவற்றைத் தடை செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கிறோம்," என்று கூறியுள்ளார் முகமது சலாகுதீன் டாக்னி.


Click it and Unblock the Notifications