தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தெலுங்கானா சட்டப்பேரவையில் 2025 -26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பெரிய அளவில் நிதி பற்றாக்குறை இருப்பதாக தெலுங்கானா மாநில அரசு கூறியது.
இந்த நிலையில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசின் நிதி நிர்வாகம் சரியில்லை என குற்றம் சாட்டும் எதிர்க்கட்சியினர் 71 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை இருக்கக்கூடிய சூழலில் 200 கோடி ரூபாய்க்கு அழகி போட்டி நடத்த வேண்டி அவசியம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளனர். பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக அம்மாநில சட்டப்பேரவையிலேயே குரல் எழுப்பினர்.

தெலுங்கானாவில் தற்போது கடுமையான நிதி பற்றாக்குறை நிலவுகிறது. இத்தகைய சூழலில் உலக அழகி போட்டியை நடத்துவதற்கு பட்ஜெட்டில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பப்படுகிறது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் வரும் மே மாதம் 7ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 72ஆவது உலக அழகி போட்டி நடைபெற இருக்கிறது. இதற்காக அம்மாநில பட்ஜெட்டில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் பாரத் ராஷ்ட்ர சமதி எனப்படும் பிஆர்எஸ் கட்சியின் தலைவர் கே.டி. ராமராவ், தங்களுடைய ஆட்சியின் போது ஐதராபாத்தில் ஈ ஃபார்முலா கார்பந்தயம் நடத்த 46 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது காங்கிரஸ் நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். ஆனால் தற்போது உலக அழகி போட்டி நடத்த 200 கோடி ரூபாயை காங்கிரஸ் அரசு ஒதுக்கியுள்ளது இது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கானாவில் 71,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை நிலவுகிறது, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணம் இல்லை, அகவிலைப்படியை கொடுக்க முடியவில்லை என முதலமைச்சரே கூறி இருக்கிறார் அப்படி இருக்கும் சூழலில் அழகி போட்டியை நடத்த மட்டும் எப்படி பணம் வந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸின் தவறான அணுகுமுறையால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி சீர்குலைவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார் .மேலும் தெலுங்கானாவில் அனைத்தும் சீராக நடக்கிறது என காங்கிரஸ் அரசு அனைவரையும் நம்ப வைக்க பார்க்கிறது, அப்படி இருக்கும்போது மாநிலத்தின் வளர்ச்சி எதிர்மறையாக இருக்கிறது, 71,000 கோடி ரூபாய் பற்றாக்குறை இருக்கிறது என முதலமைச்சரை எப்படி தெரிவிப்பார், தெலுங்கானா வளர்கிறதா அல்லது வீழ்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார் .
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள ரேவந்த் ரெட்டி இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சியினர் மாநிலத்தை மிகப்பெரிய அளவு கடனில் தள்ளிவிட்டனர் என்றும் மாதம் தோறும் 1.53 லட்சம் கோடி ரூபாயை தங்களது அரசு கடன்களுக்கான வட்டியாக மட்டுமே செலுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications