சர்வதேச முதலீட்டாளர்களின் விருப்பமான மாநிலமாக மாறுவதற்கான நடவடிக்கைகளை தெலுங்கானா மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் கூடுதலாக எம்எஸ்எம்ஈ தொகுப்புகளை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தெலுங்கானாவில் முதலீடு செய்ய முன்வந்துள்ள நிறுவனங்களுக்கு இடம் அளிப்பதற்காக தெலங்கானா மாநில தொழில்முறை உள்கட்டமைப்பு கழகம் நிலங்களை அடையாளம் கண்டு வருகிறது.
கடந்த சனிக்கிழமை அன்று தெலுங்கானா மாநிலத்தின் தொழில்துறை உள்கட்டமைப்பு கழகம் வெளியிட்ட அறிக்கையில், தெலுங்கானாவில் உலகத்தரம் வாய்ந்த தொழில்துறை உள்கட்டமைப்புகளை கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்படும் என கூறியுள்ளது. பல இடங்களில் எம்எஸ்எம்ஈ கிளஸ்டர்கள் அமைப்பதற்கான உதவிகள் வழங்கப்படும் என்றும் இதன் மூலம் உள்ளூர் தொழில் முனைவோர் பயனடைவதோடு வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு அமைந்தது. இதனை அடுத்து தங்களது மாநிலத்தில் தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக, குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அண்மையில் டேவோஸ் சென்றிருந்தபோது தெலங்கானா மாநிலத்தில் சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வர இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். அதே வேளையில் அவர் ஊர் திரும்பிய பிறகு 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டில் நிறுவனங்கள் ஆலைகளை நிறுவ இருப்பதாகவும் கூறியிருந்தார்.
முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ள நிறுவனங்களிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர்களின் திட்டப் பணிகளுக்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தருவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெலங்கானா மாநிலத்தின் தொழில்துறை உள்கட்டமைப்பு கழகம் தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனங்களின் விண்ணப்பங்களை அவ்வப்போது ஆய்வு செய்து வருவதாகவும் நிறுவனங்களுக்கு தேவையான இடங்களில் நிலத்தை பெற்று வழங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து போது கிட்டத்தட்ட 140 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக இந்த கழகம் தெரிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்களை முழுமையாக ஆய்வு செய்த நிலையில் 113 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவற்றுக்கான நிலங்களை தேர்வு செய்துள்ளதாகவும் விரைவில் நில ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.
தெலுங்கானா அரசைப் பொருத்தவரை இந்த 113 நிறுவனங்களில் சுமார் 2000 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என்றும் இதன் மூலம் 7 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பினை பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. பிரான்சை சேர்ந்த நானே, ஹாங்காங்கின் ஏபிசி மற்றும் மலபார் கோல்டு ஆகிய நிறுவனங்கள் இதில் அடங்கும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications