டெல்லி : ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட பல தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம், மத்திய தொலைத்தொடர்பு துறை கோரிய 92,641 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த வாரத்தில் தீர்ப்பு வழங்கியது.
மத்திய தொலைத்தொடர்பு துறையானது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வருவாய்க்கு தகுந்தாற் போல, லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரத்துக்கும் கட்டணங்களை நிர்ணயிப்பார்கள்.
அந்த வகையில் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சரிசெய்த தோராய வருவாய் (AGR ) அடிப்படையில் தான் மத்திய தொலைத் தொடர்பு துறை, லைசென்ஸ் கட்டணங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை நிர்ணயிக்கிறார்கள். சரி இதில் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா?
எதை சேர்த்துக் கொள்ளலாம்? எது வேண்டாம்?
இந்த சரிசெய்யப்பட்ட வருவாயில் எதை சேர்த்துக் கொள்ளலாம், எதையெல்லாம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதே வாதம். இது பற்றி அரசு தரப்பில் இந்த வருவாய் கணக்கீட்டில் டிவிடெண்டுகள், மொபைல் போன்களை விற்று வரும் வருமானம், பழைய பொருட்கள் விற்பனை மற்றும் வாடகை மூலம் வரும் வருமானம் என பலவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இதன் மூலம் தான் லைசன்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை கணக்கிட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
தொலைத் தொடர்பு வருவாய்
இதே தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஏர்டெல், வோடபோன் ஐடியா,போன்ற நிறுவனங்களோ, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் தொலைத் தொடர்பு சேவை வழியாக கிடைக்கும் வருவாயை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு லைசென்ஸ் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை கணக்கிட வேண்டும் என்று வாதிட்டன.
வட்டியும் முதலும் சேர்த்து செலுத்த வேண்டும்
இந்த நிலையில் மத்திய தொலைத்தொடர்பு துறையின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பாக்கி வைத்திருப்பதாக கூறும் தொகையான, லைசென்ஸ் கட்டணம், லைசென்ஸ் கட்டணங்களுக்கான வட்டி, அபராதம், அபராதத்துக்கான வட்டி என அனைத்தையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நிலுவையில் ஏர்டெல், வோடாபோனுக்கு பாதிக்கு மேல் பங்கு
இந்த நிலுவைத் தொகையில் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா மட்டும் 54 சதவிகிதம் இருப்பதாகவும், இதில் ஏர்டெல் நிறுவனம் 21,682 கோடி ரூபாயும், இதே வோடபோன் ஐடியாவுக்கு 28,306 கோடி ரூபாயும் உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இது ஒரு 16 வருட சர்ச்சை என்றும் கூறப்படுகிறது.
ஜூன் காலாண்டிலேயே நஷ்டம்
இதில் கவனித்தக்க விஷயம் என்னவெனில் கடந்த ஜூன் காலாண்டிலேயே ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் பெருத்த அடி வாங்கியது தான். இதில் ஏர்டெல் நிறுவனம் 2,392.2 கோடி ரூபாய் நஷ்டத்தினையும், இதே வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு 4,873.9 கோடி ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரச்சனையில் மீள என்ன தான் வழி?
ஏற்கனவே ஜியோவின் வருக்கைக்கு பின்பு பெருத்த அடிகண்ட இந்த நிறுவனங்கள், ஏற்கனவே நஷ்டத்தில் உள்ள நிலையில், அரசின் விதிமுறைகளையும் பின்பற்றாததால் மீண்டும் பெரும் அடியை வாங்க காத்திருக்கின்றன. இந்த நிலையில் இந்த பிரச்சனையில் இருந்து இந்த நிறுவனங்கள் எப்படி மீண்டு வரும், அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகையை எப்படி செலுத்துவார்கள் என்பது தான் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications