இந்தியாவில் ஏர்டெல் ,ஜியோ, பிஎஸ்என்எல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தொலைதொடர்பு சேவையை வழங்குகின்றன. இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் அரசுக்கு சொந்தமானது . பிஎஸ்என்எல் பொருத்தவரை தனியார் நிறுவனங்களுக்கு நிகராக இன்னும் தன்னுடைய சேவை கட்டமைப்புகளை அதனால் விரிவாக்கம் செய்ய முடியவில்லை. இருந்தாலும் படிப்படியாக தன்னுடைய தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
குறைந்த ரீசார்ஜ் திட்டங்களை கொண்டிருந்தாலும் பிஎஸ்என்எல் நெட்வொர்க் விரிவாக்கம் முழுமை பெறவில்லை என்பதால் இந்திய வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனங்களை தான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இந்திய சந்தையை பொறுத்தவரை தொலைத்தொடர்பு சேவையில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன .

இந்த நிறுவனங்கள் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணங்களை திடீரென உயர்த்துவது , மாற்றி அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன . 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜியோ ,ஏர்டெல் ,வோடபோன் ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணங்களை திடீரென உயர்த்தி வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தன.
இந்த ஆண்டும் அதேபோன்ற ஒரு ரீசார்ஜ் கட்டண உயர்வு இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் , வோடபோன் ஆகிய நிறுவனங்கள் மறைமுகமாக தங்களுடைய ரீசார்ஜ் கட்டணங்களை மாற்றி அமைக்க தொடங்கிவிட்டதே இதற்கான முதல் அறிகுறி என எக்னாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. வோடபோன் ஐடியா தன்னுடைய ஓராண்டுக்கான ப்ரீபெய்ட் பிளான் திட்டமான 1999 ரூபாயை பேக்கை 12 சதவீதமும் 84 நாட்களுக்கான 509 ரூபாய் திட்டத்தை 7 சதவீதம் வரையிலும் உயர்த்தி இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனமும் தன்னுடைய 200 ரூபாய்க்கு இருந்த குறைந்தபட்ச இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் கூட சில நுழைவு நிலையில் இருக்கக்கூடிய பிரீபெய்டு திட்டங்களின் வேலிடிட்டியை குறைத்து இருக்கிறது .
இந்த நிலையில் டிசம்பர் மாதம் இறுதிக்குள் தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை நிச்சயம் உயர்த்தும் என மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. சராசரியாக 28 நாள் வேலிடிட்டி கொண்ட ஒரு நாளைக்கு 1.5 gb டேட்டா வழங்கக்கூடிய ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணம் 50 ரூபாய் வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
5ஜி சேவை விரிவாக்கம் , ஸ்பெக்ட்ரம் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கான செலவினங்களுக்காக இந்த நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 முதல் 25% வரை ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. நாட்டில் பணவீக்கம் குறைந்து இருப்பது, மக்கள் கைகளில் பணபுழக்கத்தை அதிகரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தங்களின் செலவினங்கள் அதிகரித்தது ஆகியவற்றை எல்லாம் கொண்டு நிறுவனங்கள் எவ்வளவு விலை உயர்த்தலாம் என ஆய்வு செய்து வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications