சென்னை: இந்தியாவில் தற்போது மின்சார வாகன விற்பனை சந்தை சூடு பிடித்திருக்கிறது. ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் வெளிநாட்டை சேர்ந்த டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களும் இந்திய சந்தையில் கால் பதிக்கின்றன. இருந்தாலும் வெளிநாட்டு நிறுவனங்களால் அத்தனை எளிதாக இந்திய நிறுவனங்களோடு போட்டியிட முடியாது என ஆனந்த் ரதி என்ற தரகு நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
கூடிய விரைவில் எலான் மஸ்இன் டெஸ்லா இந்தியாவில் தன்னுடைய மின்சார காரை விற்பனைக்கு கொண்டுவர இருக்கிறது. முதலில் டெஸ்லாவின் மலிவு விலை காரான டெஸ்லாவின் மாடல் 3 இந்திய சந்தையில் விற்பனைக்கு வர வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் நாம் இறக்குமதி வரி மற்றும் சாலை வரி உள்ளிட்டவற்றையெல்லாம் கணக்கீடு செய்து பார்க்கும் போது டெஸ்லா காரின் மாடல் 3-யின் விலை 40 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இத்தனை விலை கொடுத்து மக்கள் அத்தனை எளிதாக மின்சார காரை வாங்கி விட மாட்டார்கள். எனவே தற்போதைக்கு டெஸ்லா நிறுவனத்தால் இந்தியாவில் மின்சார கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை என சொல்லப்படுகிறது . சீனாவின் பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய மின்சார கார்களை ஏற்கனவே விற்பனை செய்ய தொடங்கிவிட்டது. இருந்தாலும் இந்திய நிறுவனங்களோடு அதனால் போட்டியிட முடியவில்லை.
சீனாவை சேர்ந்த நிறுவனம் என்பதால் பிஒய்டி நிறுவனத்தால் அத்தனை எளிதாக இந்தியாவில் முதலீடு செய்து விட முடியாது எனவே அது இறக்குமதி செய்து தான் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டி இருக்கிறது. இது அந்த நிறுவனத்தின் வாகன விலையை குறைப்பதில் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் கூடிய விரைவில் தமிழ்நாட்டில் மின்சார வாகன ஆலையை நிறுவ இருக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் இந்த நிறுவனம் ஐம்பதாயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளது, வின்ஃபாஸ்ட் நிறுவனம் மின்சார எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்திருக்கிறது. இருந்தாலும் அத்தனை எளிதாக இதனை இந்திய சந்தையை பிடித்து விட முடியாது என சொல்லப்படுகிறது.
புதிய மின்சார வாகன கொள்கையின்படி ப்ரீமியம் மாடல் கொண்ட மின்சார வாகனங்களை அதாவது மூன்று மில்லியன் ரூபாய்க்கும் மேல் விலை கொண்ட வாகனங்களில் ஆண்டுக்கு 8000 வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். அவற்றுக்கு 15 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது . இந்த வகை மின்சார கார்கள் ஓராண்டில் 45 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. இந்த பிரிவில் தற்போதைக்கு டொயோட்டா தான் 80 சதவீத சந்தையை கையில் கொண்டிருக்கிறது.
இதனிடையே மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் ராஜேஷ் வெளிநாட்டு நிறுவனங்கள் நிச்சயமாக இந்தியாவிற்கு வரட்டும் அவர்களுடைய புதிய வாகனங்களை அறிமுகம் செய்யட்டும் ஆனால் இந்தியாவில் நாங்கள் விற்கும் விலைக்கு அவர்களால் வாகனங்களை விற்பனை செய்ய முடியாது எனக் கூறுகிறார் . இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் திறமையான பொறியாளர்களை கொண்டு சர்வதேச தரத்திலான மின்சார வாகனங்களை தயாரிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது, ஏற்கனவே மக்களிடம் பிரபலமான பிராண்டாக இருப்பது , அரசு கொள்கைகள் ஆகிய அனைத்தும் உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கே சாதகமாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications