எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவன மின்சார கார்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. டெஸ்லா கார்கள் எப்போது இந்திய சந்தைக்கு வரும் என பலரும் காத்திருந்த நிலையில் கடந்த ஆண்டு டெஸ்லா தன்னுடைய முதல் ஷோரூமை இந்தியாவில் திறந்தது.
தொடர்ந்து இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள டெஸ்லா அதன் ஒரு பகுதியாக தென்னிந்தியாவின் பிரதான நகரமான சென்னையில் தனது புதிய ஷோரூமை திறக்க உள்ளது. இந்த வாரம் சென்னையில் திறக்கப்படும் இந்த ஷோ ரூம் experience centre என அழைக்கப்படுகிறது. ஐதராபாத் மற்றும் பெங்களூருக்கு பிறகு தென்னிந்தியாவில் டெஸ்லாவின் மூன்றாவது ஷோ ரூமாக சென்னை ஷோ ரூம் அமைய உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் டெஸ்லாவின் ஆறாவது விற்பனை நிலையமாகவும் இது அமைய உள்ளது.

டெஸ்லா நிறுவனம் பெரும் எதிர்பார்ப்பில் இந்திய சந்தையில் கால் பதித்தாலும் அதன் விலை அதிகமாக இருப்பதால் மாஸ் ஆடியன்ஸுக்கான காராக இல்லாமல் போய்விட்டது. இதனால் எதிர்பார்த்த விற்பனை நடக்கவில்லை. ஆனால் படிப்படியாக டெஸ்லா விற்பனை அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. டெஸ்லா நிறுவனத்திற்கு இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் கடந்த 20 நாட்களில் சுமார் 150 கார்கள் விற்கப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட கார்களை விற்றுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 38 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் திறக்கப்பட உள்ள இந்த ஷோ ரூம் மூலம் தமிழ்நாட்டில் டெஸ்லா கார்களின் விற்பனையை மேலும் அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த experience centreஇல் வாடிக்கையாளர்கள் நேரடியாக சென்று டெஸ்லா கார்களையும் அதன் சிறப்பம்சங்களையும் பார்வையிடலாம். அதன் பிரீமியம் அனுபவமே பலரையும் வாங்க தூண்டும் என சொல்லப்படுகிறது. மேலும் வாகனங்களை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். எந்த ஏரியாவில் கடை திறக்கப்படுகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தற்போது இரண்டு Model Y கார்களை விற்பனை செய்கிறது. இதில் Model Y Premium Rear-Wheel Drive காரில் விலை 50.89 லட்சம் ரூபாய் ஆகும். இது 5 பேர் அமரும் வசதியை கொண்டுள்ளது. 5.9 விநாடிகளில் 0-இல் இருந்து 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை பயணிக்க கூடிய திறன் பெற்றுள்ளது.
Model Y L All-Wheel Drive கார், 6 இருக்கை வசதியை கொண்டுள்ளது. இதன் தொடக்க விலை 62 லட்சம் ரூபாய் ஆகும். இது 5 விநாடிகளில் 0-இல் இருந்து 100 கி.மீ வேகத்தை எட்டும், ஒரு சார்ஜ் செய்தால் 681 கி.மீ வரை பயணிக்க கூடிய ஆற்றலை கொண்டுள்ளது.
இந்த இரண்டு கார் மாடல்களையும் டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆர்டர் செய்ய முடியும்; இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் கார்கள் டெலிவரி செய்யப்படுகின்றன.அதுமட்டுமில்லாமல் வீட்டிலேயே சார்ஜிங் அமைத்துக்கொடுக்கும் சேவையையும் வழங்குகிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே வின்ஃபாஸ்ட் நிறுவனம் உற்பத்தி ஆலையை தூத்துக்குடியிலும் சென்னையில் ஷோ ரூமையும் நடத்தி வருகிறது. அதே போல சீனாவின் பிஒய்டி கார்களும் தமிழ்நாட்டில் அதிகம் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இரண்டு கார்களுக்கும் போட்டியாக டெஸ்லா கார்கள் அமையும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications


