இந்தியாவுக்கு வராத எலான் மஸ்க், இந்தியத் தொழிற்சாலை திட்டத்தைக் கிடப்பில் போட்ட எலான் மஸ்க், திடீரென சீனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.
டெஸ்லா நிறுவனம் சீனாவில் தனது முழு தானியக்க ஓட்டுநர் தொழில்நுட்பத்தை (Full-Self Driving - FSD) அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய தடையாக இருக்கும் பிரச்சனைகளைச் சரி செய்யவும், மீண்டும் சீன வர்த்தக சந்தையை கைப்பற்றும் பணிகளுக்காகத் தான் எலான் மஸ்க் சீனாவுக்கு தனது பிரைவேட் ஜெட் விமானத்தில் சென்றார்.

டெஸ்லா நிறுவனம் சீனாவில் தனது முழு தானியக்க ஓட்டுநர் தொழில்நுட்பம் (Full-Self Driving - FSD) சேவையை அறிமுகம் செய்ய மேப்பிங் மற்றும் நேவிகேஷன் செயல்பாடுகளுக்காகச் சீன டெக் நிறுவனமான பைடு (Baidu) நிறுவனத்துடன் கூட்டணி சேர உள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
டெஸ்லா இதுநாள் வரையில் அனைத்து பணிகளையும் சொந்தமாகச் செய்துவந்த நிலையில், சீனாவில் மேப்பிங், டேட்டா ஷேரிங் விதிகள் கடுமையாக இருக்கும் காரணத்தால் சீன நிறுவனத்தின் உதவியில்லாமல் இயக்க முடியாது என்ற நிலையை எட்டிய பின்பு எலான் மஸ்க் நேரில் சென்று பிரச்சனையை Baidu நிறுவனத்துடனான கூட்டணி மூலம் சரிசெய்துள்ளார்.
இந்த கூட்டணியில் டெஸ்லா தனது ஆட்டோமேடிக் டிரைவிங் தொழில்நுட்பம், பெய்ஜிங் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இண்டர்நெட் டெக் நிறுவனமான Baidu நிறுவனத்தின் மேப் மற்றும் நேவிகேஷன் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து இயங்க உள்ளது.
டெஸ்லாவுக்கு சீனா இரண்டாவது மிகப்பெரிய சந்தையாகும், இதனால் இந்த சந்தை வர்த்தகத்தை எந்த காரணத்திற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. அதேபோல் எலான் மஸ்க் பிற நாடுகளிடம் வால் ஆட்டுவது போல் சீனாவில் செய்ய முடியாது.
டெஸ்லா நிறுவனத்தின் முழு தானியக்க ஓட்டுநர் (FSD) அம்சத்தைக் கொண்டு வருவதன் மூலம் சீனா சந்தையில் இழந்த ஆதிக்கத்தை மீண்டும் பெற முடியும் என்பது மட்டும் அல்லாமல், மார்ச் காலாண்டில் பதிவான மோசமான லாப சரிவை அடுத்த காலாண்டில் சமாளிக்க இதுதான் ஒரே வழி என எலான் மஸ்க் நம்புகிறார்.
எக்ஸ்பெங் (Xpeng) போன்ற பிற கார் உற்பத்தியாளர்கள் தங்கள் கார்களில் டெஸ்லா கார்களில் இருப்பது போன்ற முழு தானியக்க ஓட்டுநர் (FSD) அம்சத்தை அறிமுகப்படுத்தி டெஸ்லாவுடன் போட்டியிட முயற்சித்து வருகின்றனர். இந்த நேரத்தில் கூட்டணி வைக்காமல் வீம்பு காட்டினால் இருக்கும் வர்த்தகத்தை மொத்தமாக இழக்க வேண்டியது தான்.
மேலும் டெஸ்லா வருகிற ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் ரோபோ டாக்சி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications