மக்கள் நீண்டகாலமாக அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனத்தின் சைபர்டிரக்-ஐ சுமார் 60,990 டாலர் விலையில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை ரூ.50,83,425 அதாவது 50.8 லட்சம் ரூபாய்.
ஆனால் இது டெஸ்லா சைபர் டிரக்-ன் தொடக்க விலை மட்டுமே, விலையை அறிவித்த கையோடு முதல் தொகுதி வாடிக்கையாளர்களுக்குச் சைபர் டிரக் வாகனத்தை வழங்கியது டெஸ்லா நிறுவனம். டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் பகுதியில் அமைந்துள்ள டெஸ்லா நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விலை அறிவிப்பு மற்றும் சைபர் டிரக் டெலிவரி நடந்தது.

இந்த விழாவில் எலான் மஸ்க் சுமார் 10க்கும் அதிகமானோருக்குச் சைபர் டிரக்-ஐ தனது கையால் வழங்கினார். இதன் மூலம் ஆட்டோமொபைல் துறையில் ஒரு புதிய சகாப்தம் துவங்கியுள்ளதாக டெக் மற்றும் ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
டெஸ்லா நிறுவனம் கடந்த 4 வருடத்தில் புதிதாக எந்தக் கார்களையும் அறிமுகம் செய்யாத நிலையில் மக்கள் மத்தியில் அதிகப்படியான எதிர்பார்ப்பு உள்ளது. 2019ல் எலான் மஸ்க் அறிவித்த விலையைக் காட்டிலும் சுமார் 50 சதவீதம் அதிகமான விலைக்குச் சைபர் டிரக் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் இதன் தனித்துவமான டிசைன் அனைத்தையும் மூடி மறைக்கிறது.
எலான் மஸ்க் 2019 இல் சைபர் டிரக் 39,900 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தார், மேலும் இந்த டிரக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 மைல்கள் வரை செல்லும் என்றும் அறிவித்தார். ஆனால் தற்போது அறிமுகம் செய்துள்ள 3 மாடல் சைபர் டிரக் 300 மைல்களுக்கும் அதிகமான மைலேஜ் கொண்டு உள்ளது.
டெஸ்லா நிறுவனம் தற்போது ரியர் வீல் டிரைவ் வாகனத்தை 60,900 டாலருக்கு விற்கிறது, ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷன் கொண்ட சைபர் டிரக் 79,900 டாலருக்கும், சுமார் 845HP திறன் கொண்ட டாப் வேரியென்ட் காரான Cyberbeast 99,990 டாலருக்கு விற்கப்படுகிறது. தற்போது ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 2025 முதல் டெலிவரி துவங்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.






Click it and Unblock the Notifications