இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா இந்தியாவுக்கு வர பல வருடங்களாகத் திட்டமிட்டு வரும் வேளையில் தற்போது முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாதம் மிகப்பெரிய முதலீட்டாளர்கள் கூட்டத்தை நடத்த உள்ள வேளையில், குஜராத் மாநிலமும் வைப்ரென்ட் குஜராத் சுமிட் கூட்டத்தை நடத்த உள்ளது. இந்தக் கூட்டத்தில் எலான் மஸ்க் நேரடியாகக் கலந்துகொண்டு குஜராத்தில் தொழிற்சாலை அமைப்பது குறித்து அறிவிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா இந்தியாவில் அமைக்கப்படும் ஜிகாபேக்ட்ரி மூலம் இந்தியாவின் உள்நாட்டுத் தேவையைத் தீர்ப்பதைத் தாண்டி வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் தான் அமைக்கிறது.
இதனால் ஏற்றுமதி வர்த்தகத்திற்கும், அதேபோல் ஆட்டோமொபைல் உற்பத்தித் துறையில் சிறந்து விளங்கும் பகுதியில் தான் டெஸ்லா தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டு இருந்து. அப்படி டெஸ்லா-வின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து கனகச்சிதமாக பொருந்தும் இடமாக டிக் செய்யப்பட்ட 3 மாநிலம் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத்.
இதுமட்டும் அல்லாமல் தமிழ்நாட்டில் இருப்பது போல் வேறு எங்கேயும் இல்லாத அளவுக்குச் சார்ஜிங் கட்டமைப்பு உள்ளது, இதோடு டெஸ்லாவுக்கான பேட்டரியை இறக்குமதி செய்து பெற வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவது செலவுகள் அடிப்படையில் சிறந்த முடிவாக இருக்கும்.
இந்த நிலையில் குஜராத் அரசின் செய்தி தொடர்பாளர் ருஷிகேஷ் பட்டேல் கூறுகையில் எலான் மஸ் குஜராத்தில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், குஜராத் மாநில அரசு கொடுத்துள்ள சலுகைகளை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். மேலும் வைப்ரென்ட் குஜராத் கூட்டத்தில் எலான் மஸ்க் நேரில் கலந்துகொண்டு இந்த அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறியுள்ளார்.
இதேவேளையில் இந்திய அரசிடம் எலான் மஸ்க் நீண்ட நாட்களாகக் கேட்டு வந்த வரிச் சலுகை குறித்து எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் டெஸ்லா இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு டெஸ்லா-வுக்குக் கடைசியாகக் கொடுத்த ஆஃபர் டெஸ்லா இந்தியாவில் தொழிற்சாலையைத் துவங்கினால் முதல் 2 வருடத்திற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 15 சதவீதம் வரி தள்ளுபடி அளிக்கப்படும் எனத் தெரிவித்தது. இதை ஏற்றுக்கொண்டு டெஸ்லா இந்தியாவுக்கு வருகிறதா என்ற கேள்விக்குப் பதில் எலான் மஸ்க்-யிடம் இருந்து தான் வர வேண்டும்.
பொதுவாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களின் விலை 40000 டாலருக்குக் கீழ் இருந்தால் 70 சதவீத இறக்குமதி வரியும், 40000 டாலருக்கு மேல் இருந்தால் 100 சதவீத வரி விதிக்கப்படும். இந்த நிலையில் தற்போது மத்திய அரசு கொடுக்கும் 2 வருடத்திற்கான 15 சதவீத வரி தள்ளுபடி மூலம் டெஸ்லா-வின் மாடல் 3, மாடல் Y ஆகியவை கணிசமான விலை குறைய வாய்ப்பு உள்ளது.
இதன் மூலம் மாடல் 3 38 லட்சம் ரூபாய்க்கும், மாடல் Y 43 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்ய உள்ளது. எல்லாம் சரி ஏற்கனவே எலான் மஸ்க் மெக்சிகோவில் கட்ட திட்டமிட்டு இருக்கும் ஜிகாபேக்டரி தொழிற்சாலை நிலைமை என்ன..?


Click it and Unblock the Notifications