இந்தியா மிகப்பெரிய வாகன சந்தை. பலதரப்பட்ட மக்களும் வசிக்கும் இந்தியாவில் மின்சார வாகன விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மின்சார வாகன போட்டியில் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம். பட்ஜெட் விலை கார்கள் அதிகம் விற்கப்படும் இந்திய சந்தையில் டெஸ்லா போன்ற அதிக விலை கொண்ட கார்களுக்கு வரவேற்பு இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இந்த ஓராண்டில் டெஸ்லா நிறுவனம் நினைத்ததை இந்திய சந்தையில் சாதிக்க முடிந்ததா என விரிவாக பார்க்கலாம்.
எலான் மஸ்கின் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்ட் எனர்ஜி நிறுவனம், கடந்த ஓராண்டில் இந்தியாவில் தங்களின் வணிகம் குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.இதன்படி கடந்த ஓராண்டில் டெஸ்லா இந்தியாவின் ஒட்டுமொத்த வருவாய் 247.31 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. ஒழுங்குமுறை ஆவணங்களின் படி, செயல்பாட்டு மூலமான வருவாய் இதற்கு முந்தைய நிதியாண்டில் வெறும் 20.83 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. எனவே நிறுவனத்தின் வருவாய் சுமார் 12 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் முதல் நிதியாண்டிலேயே டெஸ்லா நிறுவனம் 5.16 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது 'மாடல் ஒய்' (Model Y) கார்களின் விற்பனையை தொடங்கிய முதல் கட்டத்தில், அதாவது செப்டம்பர் 2025 முதல் மார்ச் 2026 வரை இந்தியாவில் மொத்தம் 346 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின. ஆரம்பத்தில் சராசரி மாத விற்பனை 49 வாகனங்களாக மட்டுமே இருந்தது.
அதன் பிறகு டெஸ்லா கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியான ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 650 கார்கள் விற்கப்பட்டுள்ளன. இது கடந்த முழு ஆண்டின் மொத்த விற்பனை எண்ணிக்கையை விட அதிகமாகும். இதன் மூலம் சராசரி மாத கார் விற்பனை 108ஆக உயர்ந்துள்ளது.
இந்திய சந்தையில் தனது இருப்பை வலுப்படுத்தி கொள்ளும் நோக்கில் டெஸ்லா நிறுவனம் 86 கோடி ரூபாயை புதிய மூலதனமாக கொண்டு வந்துள்ளது. அண்மையில் தான் சென்னையில் ஒரு ஷோரூமை தொடங்கியது அந்த வகையில் இந்திய சந்தையில் வாகன விற்பனையையும், உள்கட்டமைப்புகளையும் விரிவுபடுத்துவதில் டெஸ்லா தீவிரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் தொடக்கத்தில் பல சவால்களை சந்தித்தாலும், படிப்படியாக அதன் விற்பனையை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. தற்போது மாடல் ஒய் கார்கள் இந்தியாவில் 52 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் சார்ஜிங் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, புது புது மாடல்களைஅறிமுகம் செய்வது என வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டுள்ளது டெஸ்லா.


Click it and Unblock the Notifications

