சீனா: எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், சீனாவில் தங்கள் நிறுவன மின்சார கார்களின் விலையை குறைத்துள்ளது. இது டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தான் டெஸ்லா நிறுவனம், அமெரிக்காவில் மாடல் Y, மாடல் X, மற்றும் மாடல் S கார்களின் விலையை குறைத்தது. இதனை தொடர்ந்து சீனாவிலும் கார்களின் விலையை குறைத்திருக்கிறது.

மாடல் 3 காரின் விலையை 14,000 யுவான் குறைத்து, 2,31,900 யுவான் என அறிவித்துள்ளது. மாடல் Y காரின் விலை 2,49,900 யுவான், மாடல் S காரின் விலை 6,84,900 யுவான் மற்றும் மாடல் S பிளெய்டு 8,14,900 யுவான் என கணிசமான அளவு விலை குறைக்கப்பட்டுள்ளது.
தங்கள் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் டெஸ்லா நிறுவனம் இவ்வாறு விலையை குறைத்துள்ளது.சீனாவில் டெஸ்லாவுக்கு போட்டியாக பிஒய்டி(BYD) என்ற சீன நிறுவனம் மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சீன அரசும் உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்க வேண்டும் என மக்களை நிர்பந்தம் செய்து வருகிறது.
இதனால் டெஸ்லா நிறுவன மின்சார கார்களின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. இந்த சூழலில் தான் விற்பனையை அதிகரிக்க டெஸ்லா நிறுவனம் கார்களின் விலையை குறைத்துள்ளது.
சீனாவில் தங்கள் நிறுவன கார்களுக்கான தேவை குறைந்தது மற்றும் போட்டி அதிகரித்தது ஆகியவை காரணமாக டெஸ்லா நிறுவனம் பல்வேறு சலுகைகளுடன் கார்களை விற்பனை செய்து வருகிறது. இன்சூரன்ஸ் பெற்று தருவதில் சலுகை, கேஷ் பேக் என பிப்ரவரி முதலே சலுகைகளை வழங்கிய டெஸ்லா தற்போது அதிரடியாக விலையை குறைத்துவிட்டது.
இதனிடையே டெஸ்லாவின் போட்டி நிறுவனமான பிஒய்டி நிறுவனமும், தங்களது எஸ்யூவி ரக கார்களின் விலையை 15% குறைத்துள்ளது. இதனால் அண்மையில் உலகின் பிரதான மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் என டெஸ்லாவை பின்னுக்கு தள்ளி பிஒய்டி இடம்பிடித்துள்ளது.
நடப்பாண்டின் முதல் காலாண்டில் டெஸ்லாவின் கார் விற்பனை விகிதம் குறைந்துவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் முதன் முறையாக டெஸ்லாவின் வாகன விற்பனை குறைந்துள்ளது. அதிக விலை காரணமாக டெஸ்லாவின் கார்களை வாங்குவதில் ஆர்வம் குறைந்திருப்பதும் போட்டி நிறுவனங்கள் குறைந்தவிலைக்கு கார்களை விற்பனை செய்வதற்கும் இதற்கு முக்கிய காரணம்.
சர்வதேச அளவில் போட்டி அதிகரித்திருக்கும் நிலையில் குறைந்த விலைக்கு கார்களை விற்பனை செய்தால் மட்டுமே டெஸ்லாவால் இந்த சரிவில் இருந்து மீள முடியும்.
இதனிடையே டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பானது நடப்பாண்டு தொடங்கியது முதலே சரிவில் இருந்து வருகிறது. நிறுவனத்தின் மதிப்பு 500 பில்லியன் டாலருக்கும் கீழ் வந்துவிட்டது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications